கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 18 September 2012

கடுகுவிதையளவு விசுவாசம்

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 17: 20).

ஒரு மிஷனரி பெண், ஜப்பானில், ஒரு அனாதை இல்லத்தில், வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த அனாதை இல்லம் ஒரு மலைக்கு பின்னால் இருந்தது. மலை சூரிய வெளிச்சத்தை வராதபடி தடுத்ததால், அந்த அனாதை இல்லத்தை சேர்ந்த அநேக பிள்ளைகள் வியாதிப்பட்டார்கள். அந்த மிஷனரி பெண் அந்த அனாதை பிள்ளைகளை நேசித்தபடியால், தினமும் காலையில் அந்தப் பிள்ளைகளுக்கு, வேதத்திலிருந்து வசனத்தை எடுத்துக் காண்பித்து, அதை விளக்கி, காண்பிப்பது வழக்கம்.

ஒரு முறை அவர்கள், ஒரு வருட விடுமுறைக்காக, அமெரிக்க செல்ல இருந்தது. போவதற்கு முன், ‘கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை அந்த பிள்ளைகளுக்கு விளக்கி, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபியுங்கள், ‘கர்த்தர் கிரியை செய்வார்’ என்று சொல்லிவிட்டு, விடுமுறைக்காக சென்றார்கள்.

ஒரு வருடம் கழித்து, அவர்கள் திரும்ப அந்த அனாதை இல்லத்திற்கு வந்தபோது, மிகவும் வித்தியாசமான பாதை இருந்தது. அவர்கள் டிரைவரிடம், ‘நீங்கள் தவறான பாதையில் செல்லுகிறீர்கள்’ என்று கூறினார்கள். ஆனால் ஓட்டுநர், அந்தப் பாதையை நன்கு அறிந்திருந்தபடியால், அனாதை இல்லத்தின் முன், சில நிமிடங்களில் வந்து நிறுத்தினார். அப்போது அந்த மிஷனரி பார்த்தபோது, அதே பழைய கட்டடிம்தான், ஆனால், அதை சுற்றிலும், தோட்டமும் பூக்கள் பூத்து குலுங்குவதையும் கண்டபோது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அதற்குள் பிள்ளைகள் வந்து, அவரைக் கட்டித் தழுவி, திரும்ப வரவேற்றனர். அவர்கள் தன் பைகளைக் கூட வைக்காமல், மிகவும் ஆச்சரியத்தோடு என்ன நடந்தது என்று பிள்ளைகளிடம் கேட்டபோது, அந்த பிள்ளைகள், ‘நீங்கள் தானே சொன்னீர்கள், விசுவாசத்தோடு இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று. நாங்கள் விசுவாசத்தோடு அந்த மலையைப் பார்த்து சொன்னோம், அது அப்படியே நடந்தது. தேவன் அதை பக்கத்திலுள்ள கடலுக்குள் தள்ளி விட்டார்’ என்று சொன்னார்கள்.

என்ன நடந்தது என்றால், ஜப்பானிய அரசாங்கம், தன் மக்களுக்கு இடம் வேண்டும் என்று நினைத்ததால், இந்த மலையை தெரிந்தெடுத்து, அதை பத்து மாதங்களுக்குள் தரை மட்டமாக்கி, அதை பக்கத்திலிருந்த பசிபிக் கடலுக்குள் தள்ளிவிட்டார்கள். அந்த சிறுவர்களின் விசுவாசம் அந்த காரியத்தை செய்ய வைத்தது.

இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 11:22-23) என்று கூறினார். உங்கள் வாழ்க்கையில் இந்த சம்பவத்தில் இருந்த மலையைப் போல் மலைகள் இல்லாமலிருக்கலாம். ஆனால், மலையைப் போன்ற பிரச்சனைகள், அந்தப் பிள்ளைகள் சூரிய வெளிச்சத்தை காணக் கூடாதபடி தடையாயிருந்ததுப் போல, நீங்கள் தேவனுடைய முகத்தைப் பார்க்க கூடாதபடி, உங்கள் வாழ்க்கையில் இருக்கலாம். எந்த நாளும் பிரச்சனைகள், பிரச்சனைகள் என்பதே என் வாழ்க்கையாகி விட்டது என்று பிரச்சனைகளையே நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால் தேவனை பார்ப்பது கடினம். ஆனால் தைரியமாக, நீங்கள் கடுகளவு விசுவாசத்தோடு, அந்த பிரச்சனைகளைப் பார்த்து, நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, நான் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும். ஏனென்றால் அது கர்த்தருடைய பரிசுத்த வார்த்தை. அது ஒரு நாளும் பொய் சொல்லாது.

ஆனால் நீங்கள், விசுவாசமில்லாமல், ‘நான் சொல்லி என்ன நடக்கப் போகிறது’ என்று நினைத்தீர்களானால், அதினால் ஒரு பிரயோஜனமுமிராது. கர்த்தரால் பெயர்க்க முடியாத எந்த பெரிய மலையும் இந்த உலகத்தில் இல்லை. அந்த சிறுப்பிள்ளைகளுக்கு இருந்த விசுவாசத்தைப் போல் குழந்தைத்தனமான விசுவாசத்தோடு நீங்கள் கர்த்தரை நோக்கி பார்த்தீர்களானால், அது நிச்சயமாகவே உங்களுக்கு நடக்கும். விசுவாசிப்போம், பிரச்சனைகளை சமுத்திரத்திலே தள்ளுவோம், கர்த்தரின் உதவியால் நம்மால் கூடாத காரியம் ஒன்றுமிருக்காது. ஆமென் அல்லேலூயா!


நீ விசுவாசித்தால் தேவனின்

மகிமையை காண்பாய்

தண்ணீரெல்லாம் ரசமாகிடும்

உன் தாகமெல்லாம் தீர்க்கப்படும்


ஜெபம்: 
எங்கள் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய எங்கள் நல்ல தேவனே, உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் கடுகளவு விசுவாசத்தோடு, மலையை பார்த்து பேசினால், அது அப்படியே தள்ளுண்டு போகும் என்று சொன்னீரே, எங்களது விசுவாசத்தை வர்த்திக்க பண்ணும் தகப்பனே. குழந்தைகளை போல விசுவாசம் எங்களுக்குள் காணப்பட, அதன் மூலம் எங்கள் பிரச்சனைகளிலிருந்து நாங்கள் விடுபட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...