கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 6 December 2012

சிலுவை அன்பு

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். - (யோவான் 12:25).

'இப்பொழுது நாம் என்ன செய்வது? கீழே ஒரு நகரம் இருக்கிறது. பள்ளிக்கூடம் ஒன்றும் காணப்படுகிறது. இங்கே இந்த ஹெலிகாப்டர் வெடித்து கீழே விழுந்தால் இந்நகரிலுள்ள அநேகர் இறந்து விடுவார்கள். ஆனால் நாம் தப்பித்து கொள்ள பாராசூட் இருக்கிறது' என்று கூறி கொண்டிருந்தவரிடம் மற்றொருவர், 'நாம் முடிந்த அளவு வேகமாக ஹெலிகாப்படரை ஓட்டி சென்று விடுவோம். ஒருவேளை ஹெலிகாப்டர் வெடித்தால் நாம் இருவர் மாத்திரமே இறப்போம். ஆனால் கீழேயுள்ள அநேகரை காப்பாற்றி விடலாம்' என்று கூறி கொணடிருக்கும்போதே அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் ஊருக்கு வெளியில் சென்று வெடித்ததால் நகர மக்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அதை ஓட்டி சென்ற இரண்டு இளம் இராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்து விட்டனர். இந்த இருவரும் பேசிய இறுதி பேச்சுக்களே மேலே படித்த சம்பவம்.

அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்த 28 வயதான இராணுவ அதிகாரி பானுசந்தர். கணிணி துறையில் இஞ்சினியரான இவர் பல்கலை கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், தனக்கு வந்த வேலை வாய்ப்புக்களை தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்யும்படி இராணுவத்தில் சேர்ந்து கடின உழைப்பு மற்றும திறமையினால் சிறுவயதிலேயே அதிகாரியாக உயர்ந்தவர். மற்றவர் சண்டிகரை சேர்ந்த ராதோர். பெற்றோருக்கு ஒரே மகனான இவர் தன்னை தேசத்தை காக்கும் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். இந்த இருவரும் தப்பித்து கொள்ள வாய்ப்பிருந்தும் தப்பித்து கொள்ளாமல் இறந்ததற்கு காரணமென்ன? நான் மரணமடைவதாயிருந்தாலும் என் தேசத்சை காக்கும்படி கடைசி மூச்சு வரை போராடுவேன் என்ற அவர்களின் உறுதி மொழியே! அர்ப்பணிப்பே அப்படி செய்ய தூண்டியது.
நாம் ஆராதிக்கும் ஆலயங்கள் ஏற்பட காரணமாயிருந்த மிஷனெரிகள் அநேகருடைய வாழ்க்கை சரிதைகளை வாசித்து பார்ப்போமானால் நாற்பது, நாற்பத்தைந்து வயதிற்குள்ளாகவே அநேகர் மரணமடைந்திருக்கிறார்கள். ஒரு நண்பர் எழுதின கடிதத்தை படித்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் இந்தியாவின் மீது பாரம் கொண்டு அந்த கடிதத்தையே அழைப்பாக ஏற்று குஷ்டரோகிகளின் மத்தியில் ஊழியம் செய்து, அவரும், அவருடைய இரண்டு மகன்களும் இரத்த சாட்சியாக மரித்தது நாம் அனைவரும் அறிந்ததே! ஒரு மிஷனெரியின் பிரசங்கத்தின் மூலம் இந்தியாவின் நிலைமையை அறிந்த வில்லியம் கேரி அறியாமையிலுள்ள மக்களை விடுவிக்கும்படி ஜெபித்தார். குறைந்த கலிவியறிவு உடையவராக இருந்தாலும் மிஷனெரியாக இந்தியா வந்து 40க்கும் மேற்ப்பட்ட இந்திய மொழிகளி;ல் பைபிள் அச்சிடப்பட காரணமாயிருந்தார். இப்படி அநேகர் பணி செய்யும்படி அவர்களை உந்தி தள்ளியது என்ன? சிலுவை அன்பே! அதே அன்பை நமக்குள்ளும் வாசம் செய்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த நாம் என்ன செய்கிறோம்?

நம்மை சுற்றியுள்ள மக்களை பார்க்கும்போது மேய்ப்பனற்ற ஆடுகளை போல இருக்கிறார்களே என்று கண்ணீர் விடுகின்ற இயேசுவுக்கு உங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்த போகிறீர்கள்? அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் என்ற ஏக்கமுள்ள இருதய பாரமுள்ள வார்த்தைகளுக்கு நமது பதில் என்ன? நம்முடைய கிறிஸ்துவுக்கு அவருக்காக நிற்க, உழைக்க ஆட்கள் தேவை! நமது வாழ்க்கை, தாலந்துகள், நேரங்கள், விடுமுறைகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்ப்பணிப்போமா? அவர் நமக்கு செய்த, நமக்கு கொடுத்த எல்லா காரியங்களுக்கு ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? எது ஈடாகும்? ஓன்றுமே இல்லை! ஆனாலும் நம்மால் இயன்றதை அவருக்காக செய்வோமா? குடும்பத்திலுள்ளவர்கள் அதிலிருந்து பிரிந்து, தியாகமாக செய்தால்தான் ஊழியம் என்று நினைக்காதீர்கள். கர்த்தர் உங்களை குடும்பமாக இணைத்திருந்தால், குடும்பமாக அவருக்கென்று ஊழியம் செய்யுங்கள். குடும்பத்தை விட்டு விட்டு, ஊழியத்திற்கு போகிறேன் என்று சல்லாதிருங்கள். கர்த்தர் இணைத்து வைக்கிற தேவன், பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறவர் அல்ல! மனைவி ஊழியத்திற்கு வர மாட்டேன் என்று சொல்வார்களானால், அவர்களுக்காக தேவனிடத்தில் உங்கள் ஜெபத்தில் மன்றாடுங்கள். கர்த்தர் அவர்களையும் உங்களோடு இணைந்து ஊழியம் செய்ய வைப்பார்.

இந்த வாரத்தில் ஈரான் தேசத்தில், நீதிமன்றத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த வாலிப போதகர் யூசுப் நடர்கனி அவர்களுக்கு சென்ற வருடமே அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டதால் மரண தண்டனை விதித்த ஈரானின் அரசு இப்போது இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவை பற்றி கொண்டிருக்கிற அவருக்கு ஈரான் அரசு தயவு காட்டும்படியாக நாம் ஜெபிப்போமா?
Related Posts Plugin for WordPress, Blogger...