கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 27 February 2013

ஜெபம் கேட்கப்படாததன் ஒரு காரணம் -ஆய்வு

'..நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது'. - (ஏசாயா 1:15).

ராஜன் ஒரு உதவியை எதிர்பார்த்து தன் நண்பனுக்கு போன் செய்தான். அநத நண்பர் காவல் துறையிலே உயர்ந்த பதவியில் இருந்தார். ராஜன் தொலைபேசியை எடுத்தான். எண்களை சுழற்றினான். நண்பர் இன்னும் போனை எடுக்கவில்லை. மணி அடித்து கொண்டேயிருந்தது. ராஜன் தனது தேவையை மளமளவென்று சொன்னான். போனை வைத்து விட்டான். மறுநாள் 'ஐயோ நான் அவரிடம் கேட்டேனே அவர் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே' என்று புலம்பினான். ஆனால் அவனோ அவரிடம் பேசவே இல்லை. அவர் மறுமுனையில் போனை எடுக்கவே இல்லை. ஆம் நம்மில் அநேகருடைய ஜெபமும் இப்படித்தான் இருக்கிறது, 'ஆண்டவரே இதுதான் என்னுடைய வேண்டுதல். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்'. ஆண்டவர் அந்த முனையில் போனை எடுக்ககூட இல்லை. இப்பொழுது நீங்கள் தேவனிடம் ஜெபிக்கவில்லை. உங்களிடமே ஜெபித்திருக்கிறீர்கள். 'நான் ஜெபித்து விட்டேன், தேவன் எனக்கு பதில் கொடுப்பார்' என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும் ஜெபங்கள் கேட்க கூடாதபடி சில தடைகள் நம் வாழ்வில் காணப்படுமேயானால், அதை திருத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.

லூக்கா 18:9-14 வரை உள்ள இயேசுகிறிஸ்து கூறியுள்ள உவமையிலே பரிசேயன் தன்னிடத்தில் தானே ஜெபித்தான். இதை குறித்து ஆங்கில வேதாகமத்திலே மிக தெளிவாக போடப்பட்டிருக்கிறது, He pray to himself என்று. உங்களுக்கு நீங்களே பேசி கொள்வதை போல இன்றும் அநேகர் தேவனை நோக்கி ஜெபிக்கிறேன் என எண்ணுகிறார்கள். ஆனால் தேவன் அந்த ஜெபத்தை கேட்கவில்லை. காரணம் அவர்களின் மனசாட்சி தூய்மையாக இல்லை. பரிசேயனை போல மற்றவர்களை காட்டிலும் நான் நல்லவன் என எண்ணி கொணடிருக்கிறார்கள். இந்த பூமியில் நாம் அற்பமாய் எண்ணும் ஒரு மனிதன் இருந்தால் கூட தேவன் மறுமுனையில் போனை எடுக்க மாட்டார். பிறரை அற்பமாய் எண்ணுகிற நம் ஜெபத்திற்கு தேவன் செவி கொடார். நம் சபையிலுள்ள ஒரு நபரை பார்த்து, 'ஆண்டவரே உமக்கு நன்றி, நான் இந்த ஆளைப்போல இல்லை' என்போமானால் தேவன் நம் ஜெபத்தை கேட்க மாட்டார். ஆனால் ஆயக்காரனோ, ' தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்றான். அந்த ஒரே வாக்கியத்தினாலே அவன் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக்கப்பட்டவனாக வீட்டிற்கு சென்றான். ஏன்? அவன் எல்லாரை காட்டிலும் நான்தான் மோசமானவன் என்று உணர்ந்தான். ஆண்டவராகிய வேறு ஒருவரோடும் தன்னை ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு பாி என்று தன்னை தாழ்த்தினான். சில சமயங்களில் நாம் மற்றவர்களை அற்பமானவன் என்று காயப்படுத்தும் வார்த்தைகளால் பேசாமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய நடத்தையால், மனப்பான்மையினால் அவர்களை சிறியவன் என உணர செய்வோமானால் நம் ஜெபம் கேட்டப்படாது. நான் ஒன்றுமே தவறு செய்யவில்லையே, ஒரு கடின வார்த்தை கூட பேசவில்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம் நடத்தையும், மனப்பான்மையும் நம்முடன் இருக்கும் கணவரையோ, மனைவியையோ, சகோதரனையோ, சக விசுவாசியையோ, குடும்ப அங்கத்தினரையோ சிறியவர்கள் என உணர செய்து விட்டால், அது நம் ஜெபத்தை தேவன் ஏற்று கொள்ளாதபடி தடை செய்து விடும். அந்த பரிசேயன் ஆயக்காரனை அற்பமாய் எண்ணினான். அதுவே தேவன் அவனை ஏற்றுகொள்ளாதபடி செய்து விட்டது. அதே போலத்தான் நாமும் நம்முடைய எண்ணத்திலே தான் நினைக்கிறோம். அதுவே நம்முடைய ஜெபத்தையும் தேவன் கேளாதபடி தடை செய்து விடுமே!

மனந்திரும்புவோமா? நாம் பரிசேயனாய் மாறாதபடிக்கு தேவனுடைய கிருபையை மாத்திரம் சார்ந்து கொண்டு ' கிருபையால் நிலைநிற்கிறோம்' என்பதை உணர்ந்து மனத்தாழ்மையோடு வாழ தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன் 
சேவை செய்யக் கிருபை தாருமே

தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுடைய ஜெபங்கள் கேட்க கூடாதபடி இருக்கிற தடைகளில் ஒன்றாக நாங்கள் மற்றவர்களை அற்பமாய் எண்ணுகிற காரியம் உணடென்று உணர்த்திய தயவிற்காக நன்றி. அந்த காரியம் எங்களிலே காணப்பட்டதுண்டானால் தயவாய் மன்னித்து எங்களை ஏற்று கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டருளும். பதிலை கொடுத்தருளும். தாழ்மையை நாங்கள் தரித்து கொள்ளவும், பெருமை கொள்ளாதபடி எங்களை காத்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
Related Posts Plugin for WordPress, Blogger...