கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 26 November 2013

அனுதினமும் காண்கிற இறைவன்.

மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். -  நீதிமொழிகள். 5:21

ஒரு மனிதனும் அவருடைய சிறிய மகனும் நடமாட்டம் அதிகமில்லாத தெருவில் சென்றுக் கொண்டிருந்தார்கள். போகும்போது ஒரு தங்க செயின் தரையில் மினுமினுப்பதை அந்த மனிதர் கண்டார். முன்னால் போன யாரோ அதைத் தவறவிட்டார்கள் என்பதை அறிந்தும்,  ( தங்கம் விற்கிற விலையில் இதுக் கிடைத்ததே லாபம் என்று எண்ணினார் போலும்!) அந்த செயினை அந்த மனிதர் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார். சுற்றிலும் முற்றிலும் பார்த்தபோது யாரும் இல்லாததைக் கண்ட அவர் சட்டென்று அந்த செயினைத் தூக்கி தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். 
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகன், 'அப்பா, நீங்க சுற்றிலும் பார்த்தீர்களே தவிர மேலே பார்க்கவில்லையே' என்றுக் கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்ட அந்த தந்தைக்கு ஞானம் வந்தது.  வெட்கமுற்றவராய்,
'ஆம் மகனே, நம் ஆண்டவர் பார்க்கிறார் என்பதை நான் மறந்துப் போனேன்' என்றுச் சொல்லி பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேசனில் போய் அதை ஒப்படைத்தார். 
 

வேதம் சொல்கிறது, கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து,நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது என்று (நீதிமொழிகள் 15:3). அவருடைய கண்கள் நாம் செய்கிற நல்லவற்றையும் தீயவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இந்த எண்ணம் ஒன்று நம் உள்ளத்தில் இருந்தால் போதும், நாம் தவறே செய்ய மாட்டோம். அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.  அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை (யோபு 34:21,22).

அக்கிரமக்காரர் அவருக்கு மறைவாக ஒன்றுமே செய்ய முடியாது. நாம் செய்கிற பாவங்கள் மட்டுமல்ல, நாம் செய்கிற நன்மைகளும் அவர் தம் கணக்கில் வைத்துள்ளார். எபிரேயரில் ஒரு 
அருமையான வசனம் இருக்ல்றது 'ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே' 
– எபிரேயர். 6:10.

அவர் அநீதியள்ள தேவன் அல்ல. உங்கள் கிரியைகளின் பலனை அவர் நிச்சயம் உங்களுக்கு 
தருவார். ஆகவே நன்மை செய்வதில் நாம் சோர்ந்து போக வேண்டாம். தம்மைப்பற்றி உத்தமஇருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது ( 2நாளாகமம். 16:9 )  தீயவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் அவருடைய வல்லமை விளங்குவதில்லை. அவரை உத்தம இருதயத்தோடு தேடுகிறவர்களுக்கு அவர் வல்லமையை விளங்கப் பண்ணுவார். உலாவுகிற அவருடைய கண்கள், அவரை நோக்கிக் கூப்பிடுகிற தம்முடைய ஜனத்தின் தேவைகளை காண்கிறது. உடனே அவருடைய வல்லமையை அனுப்பி தேவைகளை சநதிக்கிறார். எப்படிப்பட்ட நல்ல தேவன் நம் தேவன்! 
 
அதேசமயம் அவருடைய கண்கள் தீயோரையும் பார்க்கிறது. கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது. ஒரு நாள் அதற்கு பதில் உண்டு. ஆகவே நாம் செய்கிற நன்மைகளையும் தீமைகளையும் பார்க்கிற தேவன் உண்டு என்பதை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. ஒருநாள் கணக்கொப்புவிக்க வேண்டிய காலம் வரும்போது நாம் வெட்கப்பட்டு நிற்க வேண்டிய நிலைமை வரும், ஆகவே நன்மையானவைகளையே செய்வோம். கர்த்தருடைய நாமத்திறகு மகிமை கொண்டு வருவோம் ஆமென். 

 

     
Related Posts Plugin for WordPress, Blogger...