கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 27 February 2013

ஜெபம் கேட்கப்படாததன் ஒரு காரணம் -ஆய்வு

'..நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது'. - (ஏசாயா 1:15).

ராஜன் ஒரு உதவியை எதிர்பார்த்து தன் நண்பனுக்கு போன் செய்தான். அநத நண்பர் காவல் துறையிலே உயர்ந்த பதவியில் இருந்தார். ராஜன் தொலைபேசியை எடுத்தான். எண்களை சுழற்றினான். நண்பர் இன்னும் போனை எடுக்கவில்லை. மணி அடித்து கொண்டேயிருந்தது. ராஜன் தனது தேவையை மளமளவென்று சொன்னான். போனை வைத்து விட்டான். மறுநாள் 'ஐயோ நான் அவரிடம் கேட்டேனே அவர் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே' என்று புலம்பினான். ஆனால் அவனோ அவரிடம் பேசவே இல்லை. அவர் மறுமுனையில் போனை எடுக்கவே இல்லை. ஆம் நம்மில் அநேகருடைய ஜெபமும் இப்படித்தான் இருக்கிறது, 'ஆண்டவரே இதுதான் என்னுடைய வேண்டுதல். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்'. ஆண்டவர் அந்த முனையில் போனை எடுக்ககூட இல்லை. இப்பொழுது நீங்கள் தேவனிடம் ஜெபிக்கவில்லை. உங்களிடமே ஜெபித்திருக்கிறீர்கள். 'நான் ஜெபித்து விட்டேன், தேவன் எனக்கு பதில் கொடுப்பார்' என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும் ஜெபங்கள் கேட்க கூடாதபடி சில தடைகள் நம் வாழ்வில் காணப்படுமேயானால், அதை திருத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.

லூக்கா 18:9-14 வரை உள்ள இயேசுகிறிஸ்து கூறியுள்ள உவமையிலே பரிசேயன் தன்னிடத்தில் தானே ஜெபித்தான். இதை குறித்து ஆங்கில வேதாகமத்திலே மிக தெளிவாக போடப்பட்டிருக்கிறது, He pray to himself என்று. உங்களுக்கு நீங்களே பேசி கொள்வதை போல இன்றும் அநேகர் தேவனை நோக்கி ஜெபிக்கிறேன் என எண்ணுகிறார்கள். ஆனால் தேவன் அந்த ஜெபத்தை கேட்கவில்லை. காரணம் அவர்களின் மனசாட்சி தூய்மையாக இல்லை. பரிசேயனை போல மற்றவர்களை காட்டிலும் நான் நல்லவன் என எண்ணி கொணடிருக்கிறார்கள். இந்த பூமியில் நாம் அற்பமாய் எண்ணும் ஒரு மனிதன் இருந்தால் கூட தேவன் மறுமுனையில் போனை எடுக்க மாட்டார். பிறரை அற்பமாய் எண்ணுகிற நம் ஜெபத்திற்கு தேவன் செவி கொடார். நம் சபையிலுள்ள ஒரு நபரை பார்த்து, 'ஆண்டவரே உமக்கு நன்றி, நான் இந்த ஆளைப்போல இல்லை' என்போமானால் தேவன் நம் ஜெபத்தை கேட்க மாட்டார். ஆனால் ஆயக்காரனோ, ' தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்றான். அந்த ஒரே வாக்கியத்தினாலே அவன் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக்கப்பட்டவனாக வீட்டிற்கு சென்றான். ஏன்? அவன் எல்லாரை காட்டிலும் நான்தான் மோசமானவன் என்று உணர்ந்தான். ஆண்டவராகிய வேறு ஒருவரோடும் தன்னை ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு பாி என்று தன்னை தாழ்த்தினான். சில சமயங்களில் நாம் மற்றவர்களை அற்பமானவன் என்று காயப்படுத்தும் வார்த்தைகளால் பேசாமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய நடத்தையால், மனப்பான்மையினால் அவர்களை சிறியவன் என உணர செய்வோமானால் நம் ஜெபம் கேட்டப்படாது. நான் ஒன்றுமே தவறு செய்யவில்லையே, ஒரு கடின வார்த்தை கூட பேசவில்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம் நடத்தையும், மனப்பான்மையும் நம்முடன் இருக்கும் கணவரையோ, மனைவியையோ, சகோதரனையோ, சக விசுவாசியையோ, குடும்ப அங்கத்தினரையோ சிறியவர்கள் என உணர செய்து விட்டால், அது நம் ஜெபத்தை தேவன் ஏற்று கொள்ளாதபடி தடை செய்து விடும். அந்த பரிசேயன் ஆயக்காரனை அற்பமாய் எண்ணினான். அதுவே தேவன் அவனை ஏற்றுகொள்ளாதபடி செய்து விட்டது. அதே போலத்தான் நாமும் நம்முடைய எண்ணத்திலே தான் நினைக்கிறோம். அதுவே நம்முடைய ஜெபத்தையும் தேவன் கேளாதபடி தடை செய்து விடுமே!

மனந்திரும்புவோமா? நாம் பரிசேயனாய் மாறாதபடிக்கு தேவனுடைய கிருபையை மாத்திரம் சார்ந்து கொண்டு ' கிருபையால் நிலைநிற்கிறோம்' என்பதை உணர்ந்து மனத்தாழ்மையோடு வாழ தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன் 
சேவை செய்யக் கிருபை தாருமே

தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுடைய ஜெபங்கள் கேட்க கூடாதபடி இருக்கிற தடைகளில் ஒன்றாக நாங்கள் மற்றவர்களை அற்பமாய் எண்ணுகிற காரியம் உணடென்று உணர்த்திய தயவிற்காக நன்றி. அந்த காரியம் எங்களிலே காணப்பட்டதுண்டானால் தயவாய் மன்னித்து எங்களை ஏற்று கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டருளும். பதிலை கொடுத்தருளும். தாழ்மையை நாங்கள் தரித்து கொள்ளவும், பெருமை கொள்ளாதபடி எங்களை காத்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday 18 February 2013

இறைவனோடு ஒப்புரவாகுதல்


'முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்' - (எபேசியர்2:13-16).

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீடு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர். 40 வருடங்களாக அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களை பகிர்ந்து, அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு நாள் இருவருக்கும் இடையில் ஏதோ தகறாறு வந்து, இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தனர். ஒருவரோடொருவர் பேசி கொள்வதையே நிறுத்தினர்.

ஒரு நாள் மூத்த சகோதரனுடைய வீட்டுக்கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்தபோது, ஒரு தச்சன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த சகோதரனிடம், ``எனக்கு இங்கு ஏதாவது வேலை கிடைக்குமா?' என்று கேட்டார்.

மூத்தசகோதரன் அவரிடம், 'இப்போது எதுவும் வேலை இல்லை, ஆனால் என் இளையசகோதரன் பக்கத்தில் இருக்கிறானே, அவன், என்னோடு சண்டையிட்டு, எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த பசும்புல்வெளியை புல்டோசர் கொண்டு வந்து இடித்து, இடையில் தண்ணீரை விட்டு, இப்போது எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அவன் எனக்கு இளையவன், அவனே அப்படி செய்வானானால், அவனுக்கு மேலாக நான் செய்ய வேண்டும். ஆகவே நீ எட்டு அடி உயரமுள்ள ஒரு பெரிய வேலியை கட்டு. அப்போது நான் அவனை எட்டிக்கூட பார்க்க முடியாதபடி இருக்கும். அதுதான் இப்போதைய முதல் வேலை' என்று கூறினார். வேலை செய்ய சொல்லிவிட்டு, அந்த மூத்த சகோதரனும் வயலில் வேலை செய்ய போய்விட்டார். அந்த தச்சனும், சரி என்று சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தார்.

மூத்தசகோதரன் சாயங்காலத்தில் வீட்டிற்கு வந்தபோது, அப்படியே அவர் வாயடைத்து போய் விட்டார். ஏனெனில், அங்கு வேலிக்கு பதிலாக, இடையில் ஓடின ஆற்றுக்கு மேலாக அழகிய பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அந்த பாலத்தின் வழியாக இளைய சகோதரன் வருவதை கண்டார். அருகில் வந்த இளைய சகோதரன், 'நான் உங்களை மோசமாய் பேசி, இடையில் ஆற்றை விட்டிருந்தாலும், நீர் எவ்வளவாய் என்னை நேசித்து நம் இருவருக்கும் இடையில் பாலத்தை கட்டினீர்கள், அண்ணா! என்னை மன்னித்து விடுங்கள்' எனக் கூறி அவருடைய கரத்தை பிடித்து கண்ணீர் விட்டான். அதை கண்ட தச்சன், திரும்பி செல்ல ஆரம்பித்தபோது, மூத்த சகோதரன், 'நில்லுங்கள், இன்னும் அதிகமான வேலை உங்களுக்கு உண்டு' என்று கூற, அவரோ 'நான் இன்னும் எத்தனையோ பாலங்களை கட்ட வேண்டியிருக்கிறது' என்று சொல்லிவிட்டு செல்ல ஆரம்பித்தார்.

நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும்படி இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனோடுகூட நம்மை ஒப்புரவாக்க வல்லவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே! வேறு யாரும் தேவனிடத்தில் நம்மை குறித்து பரிந்து பேசவோ, ஒப்புரவாக்கவோ முடியாது. இயேசுகிறிஸ்து புறஜாதியார் என்று அழைக்கப்பட்ட நம்மையும், தேவன் தம்முடைய சொந்த ஜனங்களாக தெரிந்து கொண்ட யூதர்களையும், பகையாக நின்ற பிரிவினையை தகர்த்து, சமாதானம் செய்தார். எப்படியென்றால், "பகையை சிலுவையினால் அவர் கொன்றார்" என்று வாசிக்கிறோம். நமக்கும் தேவனுக்கும் இடையில் பாவம் தடையாக நின்றது. நாம் ஒரு பக்கம், தேவன் ஒரு பக்கம், ஒருவரை யொருவர் நெருங்காதபடிக்கு நடுவில் பெரிய பள்ளம். சிலுவை நம் இருவருக்கும் நடுவில் ஒரு பாலமாக வைக்கப்பட்டு, நம் பாவங்கள் சிலுவையில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இப்போது நாம் தேவனை கிட்டி சேரும்படியாகவும், கிறிஸ்துவின் சிலுவை, நாம் தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடும்படியான பாலமாகவும் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று.

அவர் சிலுவையில் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினபடியால், "யூதர்களுக்கு மாத்திரம் தேவன்" என்ற நிலைமாறி, அவர் புறஜாதிகளுக்கும் தகப்பனாக இருக்கும்படியாக, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று. நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்னும் பெயரை பெற்று கொள்ளும்படியாக, தேவனுக்கு சொந்த ஜனமாக நம்மையும் கிறிஸ்து மாற்றினார். நம் இருவரையும் ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து, பகையை சிலுவையிலே கொன்று போட்டார். சிலுவை நம்மை தேவனோடுகூட ஒப்புரவாக்கிற்று. அதனால் நாமும் அப்பா பிதாவே என்று தேவனை நோக்கி கூப்பிடும் புத்திர சுவிகாரத்தை கிறிஸ்துவால் பெற்று கொண்டோம்.

கிறிஸ்துவின் சிலுவை மரணம் இல்லாதிருந்தால், தேவன் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று மட்டும் இருந்திருப்பார். ஆனால் கிறிஸ்து நமக்கும் யூதருக்கும் இடையில் இருந்த பிரிவினையை சிலுவையினாலே மாற்றி, நம் இருவரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். எவ்வளவு பெரிய பாக்கியம் இது! கிறிஸ்து வந்திராவிட்டால், நமக்காக தமது இரத்தத்தை சிந்தியிராவிட்டால், நாம் நித்திய அழிவிற்கு நேராக சென்றிருப்போம், நரகத்திற்கு பாத்திரவான்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் நம்மேல் வைத்த அன்பினால், கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி, அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவரும் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு கிருபை செய்தார். அவருடைய அன்பு எவ்வளவு பெரியது!

நம்மையும் தேவன் தெரிந்து கொண்டாரே, நித்திய ஜீவனுக்கு பாத்திரவான்களாக மாற்றினாரே, நரக ஆக்கினையினின்று நம் ஆத்துமாவை மீட்டெடுத்தாரே அவருக்கே நித்திய மகிமை உண்டாவதாக! ஆமென் அல்லேலூயா!

தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவின் சிலுவையினால் உம்மோடுகூட நாங்கள் ஒப்புரவாக கிருபை செய்தீரே உமக்கு நன்றி. முன்னே தூரமாயிருந்த நாங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமாக, இரக்கம் பாராட்டினீரே உமக்கு ஸ்தோத்திரம். அதனால் நாங்கள் பரலோகத்திற்கு உரியவர்களாகவும் நித்திய ஜீவனையும் பெற்று கொள்ளவும் கிருபை செய்கிறதற்காக உமக்கு நன்றி. புறஜாதியான எங்களையும் உமக்கென்று தெரிந்து கொண்டதற்காக உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் மூலம் உமக்கே ஏறெடுக்கிறோம் எங்கள் நல்ல தகப்பனே ஆமென்.

Tuesday 12 February 2013

பலவீனத்திலும் பெலன்

‘என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்’

தண்ணீர் சுமந்து ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கும் ஒருவர், இரண்டு பானைகளை ஒரு கம்பில் கட்டி, அதை தன் தோளின் மேல் சுமந்து, அந்த பானைகள் நிறைய தண்ணீர் எடுத்து கொண்டு வந்து, மேடான இடத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு கொடுப்பது வழக்கம். அதில் ஒரு பானையில் கீறல் விழுந்து இருந்தது. அதனால் அவர் கொண்டு வரும் தண்ணீர், வீடு வந்து சேரும்போது அந்த பானையில் பாதிதான் இருக்கும். மற்றொரு பானை பழுதில்லாமல் இருந்ததால் அதில் தண்ணீர் முழுவதுமாக வீடு வந்து சேரும்.
இப்படி இரண்டு வருடங்களாக அந்த தண்ணீர் கொண்டுவருபவர் ஒன்றறை பானைதான் தண்ணீர் தான் கொண்டு வர முடிந்தது. ஒருநாள் கீறல் இல்லாத பானை மிகவும் பெருமையுடன், ‘நீ இருந்தென்ன, பாதி பானைதான் தண்ணீர் கொண்டு வருகிறாய். நான் பார், முழு பானை தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று பெருமிதத்துடன் சொல்லி கொண்டது. அதை கேட்ட கீறல் விழுந்த பானைக்கு துக்கம் தாள முடியவில்லை. தண்ணீர் மொள்பவர் தண்ணீரை எடுக்கும் போது, அவரிடம், ‘ஐயா, என்னால் உங்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை, நான் கீறல் விழுந்த பானை, தண்ணீரை சரியாக வைக்க முடியவில்லை. வழியெல்லாம் தண்ணீரை சிந்தி பாதி தண்ணீர்தான் தினமும் என்னால் வைக்க முடிகிறது. என்னால் உங்களுக்கு மிகுந்த கஷ்டம்’ என்று வருத்தப்பட்டது.

அதற்கு அந்த தண்ணீர் சுமப்பவர், ‘நாம் போகும் பாதையின் ஓரத்தில் உன் பக்கம் மாத்திரம் பூக்கள் பூத்து குலுங்குவதை பார்த்தாயா?’ ! மற்ற பக்கம் பூக்கள் இல்லாததை பார்த்தாயா? நீ கீறல் விழுந்த பானை என்று எனக்கு தெரியும், அதை எனக்கு சாதகமாக பயன்படுத்தி நல்ல பூக்களை கொடுக்கும் விதைகளை அந்த பாதையில் நட்டேன். அப்போது உன்னிலிருந்த வழியும் தண்ணீர் அதற்கு போதுமானதாக இருந்து, நல்ல பூக்களை கொடுத்தது, இப்போது பார், அந்த பூக்கள், எஜமானருடைய மேஜையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு அந்த இடத்தையே அழகு படுத்துவதை!’ என்றார்.

நாம் அனைவரும் கூட ஏதாவது ஒரு வகையில் குறைவுபட்டவர்கள்தான். அதனால் நான் குறைவுபட்டவன் என்னால் என்ன செய்ய முடியும்? என்று நினைத்து உட்கார்ந்திருந்தால் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆனால் குறைவுபட்டிருந்தாலும் குயவனாகிய நம் தேவனின் கரத்தில் நம்மை அர்ப்ணித்து ‘அப்பா என்னை உபயோகியும்’ என்று அவரிடம் ஜெபிக்கும்போது, அந்த தண்ணீரை சுமப்பவரை போல நம் தேவன் நம் குறைவுகளிலும், அருமையாக நம்மை உபயோகப்படுத்தி எஜனமானனுடைய மேஜையை அலங்கரிக்க வைப்பார்.

கிதியோன் மீதியானியருக்கு பயந்து, ஆலைக்கு சமீபமாக போரடித்து கொண்டு இருந்தபோதுதான் கர்த்தர் அவனை தம்முடைய ஊழியத்திற்கு அழைத்தார். அவர் அவனை ‘அட கோழையே’ என்று அழைக்கவில்லை, அவர் அவனை "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று தான் அழைத்தார் (நியாயாதிபதிகள் 6:12) அவன் பயந்துதான் இருந்தான். ஆனால் கர்த்தர் அவனை பராக்கிரமசாலியாகவே பார்த்தார். ஆம், நாம் குறைவுள்ளவர்கள்தான் ஆனால் கர்;த்தர் நம்மை குறைவுள்ளவர்களாக பார்க்காமல், நம்மை ஜெயங்கொள்கிறவர்களாக, பராக்கிரமசாலிகளாக, விசுவாச போர் வீரர்களாகவே காண்கிறார்.

நம்முடைய குறைகளிலும் பெலவீனத்திலும் அதையே நினைத்து கொண்டு இருந்தால், அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு தூசியை விட்டு எழுந்து, ‘அப்பா என்னை உபயோகியும்’ என்று அவருடைய பாதத்தை பிடித்துக்கொண்டால், நிச்சயமாக நம்மை உபயோகிப்பார்.

Monday 11 February 2013

இலவசமான கிடைக்கும் இரட்சிப்பு


எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். - (ரோமர் 3:23,24).

இங்கிலாந்து தேசத்தில் அநேக வீடுகளுக்கு சொந்தக்காரரான செல்வந்தர் ஒருவர், புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்தார், எனவே தன் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருக்கும், குடிமக்களுக்கு, தேவனுடைய கிருபையின் இரட்சிப்பு எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்த விரும்பினார், அதன்படி தனக்கு சொந்தமான வீடு மற்றும் சுவற்றில், ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை 10 மணியிலிருந்து, 12 மணிவரை, யார்யார் தன்னிடம் கடன் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில் ஒட்டியிருந்தார்.

அநேகர் அந்த போஸ்டரை பார்த்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. குறிப்பிட்ட அந்த நாள் வந்த போது, அவருடைய வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவுக்கு வெளியே ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள். ''இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா'' ''இதில் ஏதோ தந்திரம் இருப்பதாக தெரிகிறது'' ''நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா? ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று நினைத்து தள்ளிவிடுவாரா?'' என்று அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள்.

''நான் முதலில் போக மாட்டேன், வேறு யாராவது போகட்டும், பின் நான் போகிறேன் என்று நின்றிருந்தார்களே ஒழிய யாரும் முதலில் போக துணியவில்லை. நேரம் கழிந்து கொண்டிருந்தது. கடைசியில் 12 மணி ஆகப்போகும் நேரம், வயதான ஒரு தம்பதியினர், அங்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் ''வீட்டு சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?'' என்று கேட்டனர், "ஆம் இருக்கிறார்" ஆனால் இதுவரை யாருக்கும் கடன் மன்னிக்கப்படவில்லை'' என்று கூறினர். அப்போது அந்த தம்பதியினர் கண்ணீருடன், ''அவர் ஒட்டிய போஸ்டர்களை பார்த்து தொலை தூரத்திலிருந்து நாங்கள் வருகிறோம், இது உண்மையா பொய்யா என்று எங்களுக்கு தெரியாது ஆனாலும் நம்பிக்கையுடன் செல்கிறோம்'' என்று கூறி உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி, அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தார்.

சரியாக 12 மணியானதும் கதவுகள் திறக்கப்பட. அந்த வயதான தம்பதியினர் வெளியே வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், ''என்ன உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றினாரா'' என்று மாறி மாறி கேள்விகள் கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள் பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு ‘ஐயா எங்களுக்கும் மன்னியும்’ என்று கதறினர். அப்போது அந்த எஜமானர், ‘இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால் நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை'' என்று கூறினார்.

''எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை இழந்த நிலையில் உள்ளனர். ஆனாலும் இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24) என்று வேதவசனம் கூறுகிறது. அதை விசுவாசித்து பற்றி கொள்ளுகிறவர்கள் மன்னிக்கபடுகிறார்கள். அதை விசுவாசியாமல் அந்த கூட்டத்தாரைப்போல அவிசுவாசமாய் வாக்குவாதம்பண்ணிக் கொண்டிருப்பவர்கள், இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பை இழந்துபோகிறார்கள்.

இலவச கலர் டிவி தருகிறர்கள் என்றால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதும். ஒருரையொருவர் நெருக்கியடித்து, இடியும், மிதியும்பட்டு, எப்படியாவது அந்த டிவி கிடைக்க வேண்டும் என்று எந்த வேதனைகளையும் பொருட்படுத்தாத அதே மக்கள், விலையேறபெற்ற இரட்சிப்பை இலவசமாய் பெற்று கொள்ளுங்கள் என்றால் அதற்கு தயாராக இல்லை.

''கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல' என்று எபேசியர் 2:8-9 -ல் வேதம் தெளிவாக நமக்கு சொல்கிறது. அது தேவனுடைய மிகப்பெரிய ஈவு. நம்முடைய எந்த கிரியைகளினாலும் அதை சம்பாதிக்க முடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறதினாலேயே அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பு பாவிகளாகிய நமக்கு கிடைக்கிறது. இலவசமாய் கிடைக்கிற அந்த இரட்சிப்பை இன்றே விசுவாசத்தோடு பெற்று கொள்வோமாக. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2 கொரிந்தியர் 6:2) கிருபையின் காலத்தில் அநுக்கிரக காலத்தில் இருக்கும்போதே நாம் அந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக!

நியாய தீர்ப்பின் நாள் நெருங்குதே

நேசர் வர காலமாகுதே

மாய லோகம் நம்பி மாண்டிடும்

மானிடரை மீட்க மாட்டீரோ

ஜெபம்: எங்களை அளவில்லாமல் நேசிக்கும் நல்ல தகப்பனே, எங்களுடைய எந்த கிரியைகளும் சம்பாதிக்க முடியாத விலையேறப்பெற்ற இரட்சிப்பை நீர் எங்களுக்கு இலவசமாய் கொடுத்த தயவிற்காக உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். அதை விசுவாசத்தோடு பெற்று கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். நாட்கள் கொடியதாய் இருக்கிறபடியால், இப்போதே கிருபையின் காலத்தில் ஒவ்வொருவரும் மிகப்பெரிய ஈவாகிய இரட்சிப்பை பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday 6 February 2013

பில்லி பிரே (Billy Bray)

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். - (எபிரேயர் 13:15).

தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy Bray) ஒருவர். இரட்சிக்கப்படும் முன் அவர் பயங்கர குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும், இருந்தார். ஒவ்வொரு இரவும், அவரது மனைவி, சாராயக்கடைக்கு சென்று அவரை அழைத்து. வருவார்களாம். ஆனால் இயேசுவின் மெய் சீடனாக மாறிய பின் இங்கிலாந்தில் ஒரு முனை துவங்கி மறுமுனை ம்ட்டும் அவரை அறியாதவர்கள் எவருமிருக்க முடியாது. அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய வாழ்வை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.
.
பில்லி பிரே, ஆண்டவரின் அன்பு தன் இருதயத்தில் நிரம்பி வழிந்தோடுவதை உணர்ந்தார். எனவே அடிக்கடி ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷத்துடன் நடனமாடுவார். 'நான் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு காலை தூக்கினவுடன் ஆண்டவருக்கு மகிமை என்றும் அடுத்த காலை தூக்கும்போது ஆமென் என்றும் என்னால் சொல்லாமல் இருக்க முடிவில்லை' என்பார். 'ஒரு பீப்பாவில் அடைத்து போட்டாலும் அதின் துவாரத்தின் வழியாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சத்தமிடுவேன்' என்று கூறுவார். ஒரு சமயம் ஹக்னில் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் 'ஒரு அம்மையார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என சத்தமிட்டு கொண்டே மரித்தார்கள்' என சொல்லப்பட்டது. உடனே பில்லி சந்தோஷமடைந்து, மரிக்கும் ஒருவர் அவ்விதம் துதிக்க கூடுமானால் உயிருடன் இருக்கும் நாம் தேவனை துதிக்க எவ்வளவாய் கடமைப்படடிருக்கிறோம்' என்றார். இவ்வாறு எப்போதும் தேவனை துதித்து கொண்டும் நடனமாடி கொண்டும் இருப்பதை கண்டு பைத்தியம் பிடித்தவன் என்று பலர் பரியாசம் பண்ணினார்கள். நான் பைத்தியம் பிடித்தவனில்லை என்றும் சந்தோஷத்தில் மூழ்கினவனென்றும் கூறுவார்.

ஒருமுறை பிளேசி என்ற இடத்திலுள்ள ஆலயத்திற்கு அவர் சென்ற போது அங்குள்ள சபையார் தங்கள் கஷ்டங்களையும், பாடுகளையும் அவரிடம் கூறினார்கள். அவர் புன்முறுவலோடு எழுந்து கைகளை தட்டிக்கொண்டு, 'நண்பர்களே நான் காடியை ருசித்திருக்கிறேன். காடியை தேவன் எனககு மிக கொஞ்சமாகவும், தேனை மிக அதிகமாகவும் கொடுத்திருக்கிறார். எப்படியென்றால் நான் துக்கப்பட முடியாத அளவிற்கு தேவன் என்னை சந்தோஷப்படுத்தி விட்டார்' என்றார். உபத்திரவங்கள் தேவன் காட்டும் தயவின் அடையாளங்கள் என்றும் அவற்றை குறித்து கிறிஸ்தவர்கள் களிகூற வேண்டுமெனறும் கூறுவார். 
.
பில்லி ஒருவரை சந்தித்த மாத்திரத்தில் அவருடைய ஆத்துமாவை குறித்து விசாரிப்பார். இரட்சிப்படைந்து விட்டதாக கேள்விப்பட்டால், உடனே குதித்தெழும்புவார், அந்நபரை பிடித்து கொண்டு நடனமாடி அப்படியே அவரை தூக்கி சுமந்து செல்வார்.
.
ஓவ்வொரு நாள் காலையிலும் சுரங்க வேலை ஆரம்பிக்குமுன் அவர் 'ஆண்டவரே இன்று யாராவது சுரங்கத்தில் மரிப்பது உமது சித்தமாயிருந்தால் அது நானாக இருக்கட்டும், அவர்களில் யாரும் மரிக்க வேண்டாம். அவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை, நான் ஆயத்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன். நான் மரித்தால் உடனே உம்மிடம் வந்து விடுவேன்' என்று ஜெபிப்பார்.
Related Posts Plugin for WordPress, Blogger...