கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 6 February 2014

என்னை தொடரும் கண்கள்.

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். ( யோபு 23:10 )

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்.” என்று அறிக்கை செய்த யோபு கடந்து சென்ற பாதை எப்படிபட்டது என்பதை நாம் அறிவோம். இங்கு அவர் “ஆனாலும்” என்று கூறுவதை கவனித்துப்பாருங்கள். அவரது அங்கலாய்ப்புகளை உணர்ந்து கொள்வார். யாருமில்லை, தன் நண்பர்களினால் அவர் முரட்டாட்டம் பண்ணுகிறவராக காணப்பட்டார். இந்த நிலையில் கர்த்தரைச் சந்திக்கும் இடத்தை தேடுகிறார். முன்னாகவும் அவர் இல்லை பின்னாலும் அவரைக் காணவில்லை இடதுபுறத்திலும் இல்லை வலதுபுறமும் வெறுமையே. ஏந்தத்திக்கிலும் அவரால் தேவ சமுகத்தை உணரமுடியவில்லை. “ஆனாலும்”…………..!

இப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டு, வழிகள் யாவும் அடைக்கப்பட்ட நிலையில் தேவனைத் தேடும் தேவபிள்ளையே, சிவந்த சமுத்திரம் மற்றும் கரைபுரண்டோடிய யோர்தான் நதிபோன்ற பிரச்சனைக்கு முகம் கொடுத்த இஸ்ரவேல் மக்களை தேவன் கைவிட்டாரா?.. சோதனை, கண்ணீர், தப்பபிப்பிராயங்கள், சந்தேகங்கள், யாவும் நமது வாழ்க்கையின் நம்பிக்கையை அழித்து போடுவதுபோல நம்மை பயமுறுத்தலாம். தாகத்தோடு வந்த இஸ்ரவேலர் முதலில் கசப்பான மாரவைத்தானே சந்தித்தார்கள். தேவன் அதை மதுரமாக்கி கொடுக்கவில்லையா? உணவுக்காக கஷ்டப்பட்ட மக்களுக்கு மன்னாவை கொடுத்தது போன்ற சந்தோஷமும் உற்சாகமும் நிறைந்த நமது வாழ்க்கை வழிகளையும் தேவன் அறிந்திருக்கிறார். என்பதையும மறக்கக்கூடாது. ஏனெனில் வழியிலே இலகுதோன்றும் போது இலகுவில் இடறியும் நாம் விழக்கூடுமே ஆகவே,அவ்வழிகளிலும் நம் கால்கள் இடறலாமல் அவரே நம்மை காத்துக்கொள்கிறார். ஏழு மடங்கு அதிகரிக்கப்பட்ட சூழையின் மத்தியில் தன் பிள்ளைகளுடன் உலாவியவர் நம்மை கைவிடுவாரா?........சூழை சூடாக அனுமதிக்கிறவர் அவரே, அதிலே நாம் அழிந்து போகாமல், பொன்னாக மிளிரும்வரை நம்மருகில் இருப்பவரும் அவரே. யோபு, தன் நம்பிக்கை யாவும் அற்றுப்போன வேளையிலும், குடும்ப வாழ்வு சிதறிவிட்ட நிலமையிலும் தன் கர்த்தருடைய கரத்தையே கண்டார்.

அப்படியானால் அதே கரத்தை ஏன் நாமும் காணக்கூடாது? நமது வழி கர்த்தரால் அறியப்பட்ட வழி என்பதை உறுதியாக நம்புவோமானால், “அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விழங்குவேன்”. என்று விசுவாச அறிக்கையைச் செய்வது நமக்கு கடினமாக இராது. தேவபிள்ளையே உன் வழிநெடுகிலும் அளவற்ற இரக்கத்துடன். உன்னை பின்தொடரும் அவரது கண்களை காணும்படிக்கு இன்றைக்கே உன் விசுவாச கண்களை திறந்துகொள். அதன்பின் உன் துன்பவழிகளும் உனக்கு நன்மையின் வழியாகவே தெரியும்.

ஜெபம்
“பிதாவே. எந்தத் துன்பம் வந்தாலும். நான் போகும் வழியை நீர் அறிந்திருப்பதனால் நான் தைரியமாக முன் செல்வேன் உமக்கே துதி… ஆமென்” 

Related Posts Plugin for WordPress, Blogger...