கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 14 January 2013

ஜான் பென்னி குக்

நன்மை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும் நன்மை செய்யாமல் இருப்பது பாவம்

ஜன.15... ஜான் பென்னி குக் எனும் அற்புத மனிதர் பிறந்த நாள். இதே நாளில் 1841 இல் புனேவில் பிறந்தார் இவர். எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த இவற்றை எப்படி பசுமையாக்குவது என யோசித்தார்.

அப்பொழுது தான் அவர் கண்களில் முல்லைப்பெரியார் அணை பட்டது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் அந்நதியை திசை திருப்பி கிழக்கு நோக்கி பாயவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை முதலிய பகுதிகளை பசுமை போர்த்திய பூமியாக மாற்றிவிடலாம் என உணர்ந்து ஆங்கிலேய அரசிடம் அனுமதி கேட்டார்.

அரசு யோசித்து. பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்; வரி வசூல் செய்யலாம் என அவர் சொன்னதும் அனுமதி கொடுத்தது அரசு. பணிகள் தொடங்கி வேகவேகமாக நடந்துகொண்டு இருக்கும்பொழுதே காட்டாற்று வெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போயிற்று. ஆனால், பென்னி குக்கின் நம்பிக்கையை அது அசைக்கவில்லை. அரசிடம் உதவி கேட்டார். அரசு மறுத்தது. தானே களத்தில் இறங்கினார். மக்களை திரட்டி வேலைகளை செய்தார். பணத்திற்காக தன் சொத்துகளை முழுக்க விற்றார். 

எந்த அளவுக்கு வறுமை அவரை ஆட்க்கொண்டது என்றால், எப்படி தமிழர்களுக்கு தாலியோ அதுபோல ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் படுக்கும் கட்டில்... அதையே விற்று செலவுச் செய்கிற அளவுக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார். எட்டு வருட உழைப்பில் உருவாகியது முல்லை பெரியாறு அணை. பென்னி குக்கின் நிலை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என சொல்லவேண்டாம் - அவரே சொல்கிற வரிகள் இவை...

"இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே முறை; எனக்கு செய்ய கிடைத்த நல்ல செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது!"என்றார். 

2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை இன்றைக்கு காத்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய  அவரின் பிறந்த தினம் இன்று. அவரின் மணிமண்டபம் இன்றைக்கு முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

Wednesday 9 January 2013

கருத்துள்ள ஜெபம்

எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை -(யாக்கோபு 5:17).

மார்ட்டின் லூத்தர் அதிகாலை 4-6 மணி வரை ஜெபிக்கும் பழக்கமுடையவர். இதைக் குறித்து அவர் கூறும்போது, 'நான்அதிகாலை ஜெபம் செய்யாவிட்டால் அந்நாளை என் வாழ்வில் இழந்து விட்டதாக உணருகிறேன்' என்றார். ஒருமுறை அவருடைய வாழ்வில் நடைபெற்ற வேடிக்கையான சம்பவம் மூலம் இன்னும் கருத்தாய் ஜெபிக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டார். ஒரு நாள் அவர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது வளர்ப்பு நாய் அருகில் வந்து படுத்துக் கொண்டது. சாப்பாட்டின் நடுவில் எசேத்சையாக தனது நாயைப் பார்த்தார். அது அவர் தட்டிலிருந்து வறுத்த கறியையே உற்றுப்பர்த்து கொண்டிருந்தது.
.
அதன் கவனத்தை திருப்பும் வண்ணமாக அதன் காதை இழுத்தார். உடம்பை தட்டினார். ஆனால் அதன பார்வையெல்லாம், ஏக்கமெல்லாம், நோக்கமெல்லாம், குறியெல்லாம் அந்த வறுத்த கறியின் மீதே இருந்தது. என்ன செய்தாலும் அதன் கவனம் திரும்பவில்லை. உடனே அவர் அந்த கறித்துண்டை எடுத்து நாய்க்கு போட்டார். அதை போட்டவுடன் அது வாலை ஆட்டிக்கொண்டு குதித்தெழுந்து மகிழ்ச்சியோடு அதை சாப்பிட்டது. மார்டின் லூத்தர் இதை தனது டைரியில் எழுதும்போது 'என்னுடைய நாயைப்போல என் நினைவெல்லாம், ஏக்கமெல்லாம், நோக்கமெல்லாம், குறியெல்லாம், பார்வையெல்லாம் நான் ஜெபிக்கும் காரியத்தின் மீது ஒருமுகப்படுத்தி ஜெபிப்பேனானால் நான் ஜெபிக்கிற எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைப்பது நிச்சயம் என கண்டு கொண்டேன்' என எழுதி முடித்தார்;.
.
பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்கள்தான். ஆனால் நம்முடைய ஜெபம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது என சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் ஜெபிக்கும் காரியத்திற்கான பதிலை தேவனிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்ற விசுவாசம் நம்மிடம உண்டா,? அல்லது சாதகமற்ற சூழ்நிலைகளை கண்டும் முழு நம்பிக்கையை தேவன் மேல் வைக்க கூடாத அளவிற்கு நம்மை வழிவிலகச் செய்யும் மனித நம்பிக்கைகளை கண்டும் ஜெபத்திலே பின்னடைகிறோமா? மாறாக நமது நோக்கம், நினைவு, ஏக்கம், பார்வையெல்லாம் தேவன் மேல் மாத்திரம்வைத்து, ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போமானால் தேவனிடமிருந்து நிச்சயமாய் பதிலை பெற்று கொள்வோம்.
மார்டின் லூத்தர் நான் அதிகாலையில் ஜெபிக்காவிட்டால் அந்த நாளை இழந்து விட்டதை போல உணருகிறேன் என்றார். நம்மைக் குறித்தும் நம் ஜெபத்தைக் குறித்தும் என்ன சொல்லுவோம்? ஜெபிக்காமல் நிர்விசாரமாயிருந்தும் ஐயோ ஜெபிக்கவில்லையே என்று உணர்வற்றிருக்கிறோமா? அல்லது ஜெபித்தும் விசுவாசமில்லாமல் கடமைக்காக ஜெபிக்கிறோமா? சிந்திப்போம்.
.
'எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை' என்று வேதம் கூறுகிறது. எலியா தீர்க்கதரிசி நம்மைப் போல சாதாரண மனிதனாக இருந்த போதிலும், அவர் ஜெபித்தபோது, மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை என்று பார்க்கிறோம். அவர் பக்கம் பக்கமாக ஜெபிக்கவில்லை. அவருடைய ஜெபம் சுருக்கமாக இருந்தாலும், அதை கருத்தாக ஜெபித்தார். தேவன் அந்த ஜெபத்தை கேட்டு பதில் கொடுத்தார்.
.
'அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்' (1 இராஜாக்கள் 18:36-37).
.
பாகாலின் நானூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக ஒரே மனிதனாக எலியா தீர்க்கதரிசி கர்த்தரே தேவன் என்பதை நிரூபிக்கும்படி ஒரு சிறிய ஜெபத்தைத்தான் செய்தார். ஆனால் அது கருத்துள்ள ஜெபமாக இருந்தது. அவர் அப்படி ஜெபித்து முடித்தவுடன் 'அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது' (38ம் வசனம்).

Sunday 6 January 2013

நியாயாசனத்தின் முன்

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10).


இவ்வுலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்ப்ட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அன்று சர்வத்திற்கும் நியாதிபதியாம் இயேசுகிறிஸ்து கெம்பீரமாய் நியாசனத்தில் அமர்ந்து நம் ஒவ்வொருவரிடமும் 'உன் உக்கிராண கணக்கை ஒப்புவி' என்று கட்டளையிட்டால் எவ்வாறு இருக்கும் என்று காண்போம்.



நான் உன் கையில் ஒப்புவித்த உலக பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய், நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக ஐசுவரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்தி கொள்வதற்காகவும் பயன்படுத்தி கொண்டாயா?



நான் உனக்கு தந்ந உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிறவிதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உனனை காத்து கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா?



உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் அவ்வுலக ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயோ? அல்லது வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? இப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்து விட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கி கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பி தந்தாயா?



நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன். அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைக்கும் பாய்னபடுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி, உன்னை பூமிக்கு அனுப்பினவரின் சித்தத்தை செய்த முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும், உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எலலாம் உன் அவயவங்களை ஈனமாய் ஒப்புக்கொடுத்து விட்டாயா?

Wednesday 2 January 2013

உலகின் ஒளி

'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்' - (மத்தேயு 5:14-15.

திடீரென்று வீட்டில் கரண்ட் கட் ஆனது. மெழுகுவர்த்தி வைத்த இடத்தை நோக்கி தட்டுதடுமாறி போய் மெழுகுவர்த்திகளை எடுத்து கொண்டு திரும்புகையில், 'அங்கேயே நில்' என்ற சத்தம் கேட்டது. யார் என்று தேடும்போது, 'நான்தான், உன் கையில் இருந்துதான் பேசுகிறேன்' என்று குரல் கேட்டது, பார்த்தால் கையிலிருந்த மெழுகுவர்த்தி! அது என்னிடம், 'என்னை இங்கிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று கூறினது. நான் 'என்ன!' என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, அது என்னிடம், 'என்னை இந்த அறையிலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று சொன்னது. நான் அதனிடம், 'நீ என்ன சொல்கிறாய்? நீ மெழுகுவர்த்தி, உன்னுடைய வேலை இருளான இடத்தில் ஒளியை கொடுப்பதுதான்!' என்று கூறினேன். அதற்கு அந்த மெழுகுவர்த்தி, 'நான் இன்னும் தயாராகவில்லை, என்னை இந்த இடத்திலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று மீண்டும் என்னிடம் கூறினது. 'நான் இன்னும் ஆயத்தமாகவில்லை, நான் ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன், அது முடிந்த பிறகு என்னை கொண்டு போ' என்று கேட்டு கொண்டது. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. 'சரி, நீ மட்டும் தான் இந்த அலமாரியில் இல்லை, உன்னை அணைத்து விட்டு, நான் மற்ற மெழுகுவர்த்திகளை கொண்டு போகிறேன்' என்று கூறினபோது, மற்ற மெழுகுவர்த்திகளும் 'நாங்களும் உன்னுடன் வரமாட்டோம்' என்று முரண்டு பண்ணின. இது என்னடா வம்பாயிருக்கிறது என்று நான் அவைகளிடம், 'வெளியே ஒரே இருட்டாக இருக்கிறது நீங்கள் யாரும் வரவல்லை என்றால், யார் ஒளியை கொடுக்க முடியும்' என்று கேட்டதற்கு, ஒரு மெழுகுவர்த்தி, 'ஒளியை கொடுப்பது எத்தனை முக்கியமானது என்று மற்றவர்களுக்கு விளக்கி கொண்டிருக்கிறேன், நீயும் வேண்டுமானால் கலந்து கொள்' என்று கூறினது. எல்லாம் ஒளியின் முக்கியத்துவத்தை குறித்து ஆராய்ந்து கொண்டும் பேசி கொண்டும் இருந்தனவே அன்றி, இறுதி வரை எந்த மெழுகுவர்த்தியும் தன் ஒளியை எடுத்து கொண்டு வெளியே வர விரும்பவில்லை. அதற்குள் கரண்டும் வந்து விட்டது.

'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்' என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாம் யாருக்காவது கிறிஸ்துவின் அன்பை குறித்து கூறியிருக்கிறோமா? உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கிறிஸ்துவை குறித்து நாம் யாருக்காவது வெளிப்படுத்தியிருக்கிறோமா? உலகம் முழுவதும் இருளுக்குள் மூழ்கி, வழி தெரியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். நாமோ ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோமே தவிர, எத்தனையோ பிரசங்கங்களை கேட்டு கொண்டுதான் இருக்கிறோமே தவிர எழுந்து பிரகாசிக்க இதுவரை முன்வராமல், விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைத்து கொண்டிருக்கிறோம். 'விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்' என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாமோ நான் இன்னும் தயாராகவில்லை, நான் சொன்னால் யார் கேட்பார்கள் என்று நம்மை குறித்தே தாழ்வாக நினைத்து ஒளி வீசாமல் மரக்காலால் மூடி வைத்து கொண்டிருக்கிறோம். நாம் தயாராவதற்குள் கர்த்தரின் வருகையும் நடந்து விடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...