கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 31 March 2013

அவசரம் வேண்டாம்!... காத்திருங்கள்

'நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்'

(நீதிமொழிகள் 13:12)


ஒரு நாள் கி‌ராம சேவகர் மரநடுகை தினத்தை முன்னிட்டு அக்கிராம மக்கள் அனைவரையும் அழைத்து ஒவ்வொருக்கும் ஒருமரக்கன்று கொடுத்தார். அதை வீட்டில் நட்டு தினமும் அதை பராமரிக்குமாறும் கூறினார். ராஜா குடும்பத்திற்க்கும் ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் வீட்டிற்கு பின்னாலுள்ள தோட்டத்தில் கவனமாக நாட்டினார்கள். வாரம் ஒரு முறை உரம் போட்டார்கள். தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றினார்கள். காலை எழுந்தவுடன் அம்மரக்கன்று இலை விட்டுள்ளதா என தினமும் ஆராய்ச்சி செய்வார்கள்.மாதங்கள் உருண்டோடின. செடியில் பெரிதான மாற்றங்கள் காணாததினால் மிகவும் விரக்தி அடைந்தார்கள்.

நாம் எவ்வளவு கவனமாக வளர்த்தோம் அதை நட்டு எவ்வளவு மாதமாகி விட்டது. ஆனால் இந்த மாமரம் காய்க்கவே இல்லையே, இனி நான் இதற்கு தண்ணீர் ஊற்றப்போவதுமில்லை, உரம் போடப்போவதுமில்லை என்று புலம்பினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த கிராம சேவகர் இவர்கள் கவலை அறிந்து விசாரித்தார். அவர்கள் தங்கள் நிலமையை எடுத்துக் கூறினார்கள் அப்பொழுது.  அவ் கிராம சேவகர் அவர்களை நோக்கி 'மாமரம் காய் காய்க்க பத்திலிருந்து பன்னிரெண்டு வருடம் ஆகும் ஆகவே, அதுவரை நாம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு' என கூறினார். அப்பொழுதான் அவர்களின் நிலை புரிந்தது.

நாமும் அநேக நேரங்களில் இவர்களைபோலவே எந்த ஒரு காரியத்திற்கும் பொறுத்திருக்க முடியாமல் அவசரப்படுகிறோம். நான் ஒழுங்காக வேதம் வாசிக்கிறேன், ஆலயம் செல்கிறேன், கர்த்தருக்கு பிரியமான வாழ்வு வாழ்கிறேன், ஆனால் இன்னும் என் ஜெபத்திற்கு பதில் வரவில்லையே, என அநேக நேரங்களில் அங்கலாய்க்கிறோம். இனி நான் ஜெபிக்க போவதே இல்லை, என்று கூட விரக்தியில் சொல்லலாம்.

ஆனால் வேதம் என்ன சொல்லுகின்றதென்று பாருங்கள், 'நீதிமானுக்காக வெளிச்சமும், மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது'. ஆம் தேவன் உங்களுக்குரிய நன்மைகளை முன்குறித்து விட்டார். அவற்றை நமக்கென்று விதைத்து விட்டார். அதை எவரும் தடை செய்ய முடியாது, ஆனால் அந்த மகிழ்சசி என்னும் விதை நமக்கு பலன் தரும் வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். வாக்குதத்தத்தின் பிள்ளையை பெற வாக்குதத்தம் பெற்ற பிறகும், ஆபிரகாம் 25வருடம் பொறுமையோடு காத்திருக்கவில்லையா? 'நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்' (நீதிமொழிகள் 13:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். அதை அவர் ஏற்ற வேளையில் கொடுக்கும்போது நிச்சயமாகவே அது ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அல்லேலூயா!
.
அப்படி காத்திருக்கும் காலம் நமக்கு விலையேறப்பெற்ற காலமாகும். அதில் நாம் தேவன் மேல் வைத்துள்ள அன்பின் ஆழத்தை அவர் கண்டு கொள்ள ஏதுவாகும். காத்திருக்கும் நாட்களில் சாத்தானுக்கு இடம் கொடுத்தோமானால் அவன் நம்மை இதை காரணம் காட்டியே தேவனை விட்டு பிரித்து விடுவான். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
.
பிரியமானவர்களே, எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் காண்பீர்கள். தேவ சமுகத்தில் விட்ட ஒரு சொட்டு கண்ணீரும் வீணாக போகாது. அவை சர்வ வல்ல தேவனுடைய கணக்கில் இருக்கிறது. ஆகவே இதுவரை நீதியாய் வாழ்ந்து என்ன பயன்? ஜெபித்து, கடவுளுக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பயன்? என்று இருதயத்திலும் நினைக்காதீர்கள்.

நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண் போகாது. ஆமென் அல்லேலூயா!

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும், அநேக நாட்களாக காத்திருந்து, கர்த்தரிடத்திலிருந்து இன்னும் பதில் வரவில்லையே என்று சோர்வோடு இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் நிச்சயமாகவே ஒரு நாள் எங்கள் தேவன் எங்களுக்கு ஏற்ற பதிலை கொடுக்க போகிற தயவிற்காக நன்றி. எங்கள் நம்பிக்கையே நீர் தானையா, அந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து போகாதபடி, சீக்கிரமாய் நல்ல பதிலை கொடுத்து எங்களை ஆதரிக்கும்படியாக உம்மிடத்தில் மன்றாடுகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

1 comment:

  1. an awesome post. thanks a lot.. it answers my million tear drops.. Praise the lord. PLz dont stop writing ..do keep post blogs about our Holy Father..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...