கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 11 March 2014

நீயே ஏற்றவன்

அவள் புறப்பட்டு …………அந்தச் செய்தியை அறிவித்தாள். – ( மாற்கு 16 : 10 )

ஆண்டவர் விரும்பி யாரை தம் பணிக்காக ஆயத்தப்படுத்துகின்றார். மேற்கண்ட வசனத்தை தியானித்து பாருங்கள். பிறரால் ஏற்றுக்கொள்ளக்கூடாதிருந்த ஒருத்தியை ஆண்டவர் தமது செய்தியைச் சொல்ல ஏற்றவள் என்று கண்டார். ஏன்றால் நம்மை புறக்கணிப்பாரா? இயேசுவுடனே கூடவிருந்த அநேக ஸ்திரீகளில் மகதலேனா மரியாளும் ஒருத்தி. இவள் பிசாசுக்களினால் அலைக்கழிக்கப்பட்டவளாய் இருண்ட ஜீவியம் ஜீவித்தவள். இதனால் இவள் வியாதிப்பட்டிருந்தாளோ, பிறருக்கு தொந்தருவாய் இருந்தாளோ, ஊராரால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தாளோ நாமறியோம். ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரியும். அவளுக்கு தொல்லைகொடுத்த ஏழு பிசாசுகளை இயேசு துரத்தியிருந்தார். பிசாசுக்களின் வலிமைப்பிடியிலிருந்து அவள் இயேசுவாலே மீட்கப்பட்டிருந்தாள். அதன் பிற்பாடு அவள் இயேசுவை நன்றியுள்ள இதயத்தோடே உண்மையாகவே பின்பற்றினாள். ஒருவேளை, இவளது பழைய வாழ்க்கை நமக்குத் தெரியாததா? இப்பொழுது வேஷம் போடுகிறாளே என்று பிறர் பரிகாசம்பண்ணி அவளைப் புண்படுத்தி இருக்கலாம். ஆனால் அவளோ ஆண்டவரைப் பற்றிக்கொண்டாள்.

மனுஷன் முகத்ததைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார். ( 1சாமு 16 : 7 ) யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமேயும்,உயிர்தெழுந்த செய்தியைத் தேவதூதர்களின் வாயிலினின்று கேட்டு, பயந்திருந்தபடியினாலே ஒருவருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டார்கள். செய்தியைகேட்டு ஒடி வந்த பேதுருவும் யோவானும்கூட வெறுமையான கல்லறையைப் பார்த்து விட்டுத் திரும்பி போய்விட்டார்கள். ( யோவான் 20 : 10 ) ஆனால் மகதலேனா மரியாளோ கல்லறையின் அருகே காத்திருந்தாள். இவளே உயிர்த்தசெய்தியை அறிவிக்கும் பாக்கியம் பெற்றாள். இயேசு, இவளுக்கே முதலாவதாகக் காணப்பட்டார். அவளும் ஒடிச்சென்று செய்தியை அறிவித்தாள். ( மாற்கு 16 : 10 )

தேவபிள்ளையே, பாவப்பிடியிலிருந்து நீ விடுவிக்கப்பட்டதைப் புரிந்து கொள்ளாதவர்களால் நீ இன்னும் பரிகசிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு துக்கித்துக்கொண்டிருக்கலாம். காரியம் அதுவல்ல. இவற்றுக்கு மத்தியிலும் ஆண்டவருக்காக காத்திருப்பாயானால், ஆண்டவர் உன்னை காண்பார். தமது நித்திய சந்தோஷ செய்தியை பிறருக்கு அறிவிக்க தகுந்தவன் என காண்கிறார். நீ ஏன் துக்கமுகத்தோடு இருக்கவேண்டும்? இயேசு உனக்கருளும் செய்தியைக் கூர்ந்து கவனி. நீ அதனை கூறவேண்டிய இடத்திற்கு அவரே உன்னை நடத்துவார். துக்கமுகத்தை கழுவிக்கொண்டு உன்னை மீட்ட இயேசுவுக்காகப் புறப்படுவாயா?

இரட்சகரே, பாவப்பிடியில் சிக்கியிருந்த என்னையா, நீர் உமது சுவிஷேத்தை அறிவிக்கும் பாத்திரமாக தெரிந்தெடுத்தீர்! நான் இதற்கு பாத்திரனல்லாத போதும் உமது சித்தம் நிறைவேற்ற என்னை தத்தம் செய்கிறேன். ஆமென்.    

Related Posts Plugin for WordPress, Blogger...