கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 1 April 2015

துணிச்சலான நம்பிக்கை

“இஸ்ரவேலே கர்த்தரில் நம்பிக்கையாயிரு” 
– சங்கீதம் 115 : 9
என் முகநூலிற்கு (Face Book) நண்பர் ஒருவர் ஒரு நிமிடம் ஓடும் குறும்படத்தை அனுப்பியிருந்தார். ஒரு தண்ணீர் நிறைந்த குளம். அதன் கரையோரமாக ஒரு குச்சி மிதந்து கொண்டிருந்தது. அதில் தவளை ஒன்று உட்கார்ந்திருந்தது. இதை ஒரு நீர் பாம்பு பார்த்துவிட்டது. தனக்கு நல்ல உணவு கிடைத்தது என்று சந்தோஷப்பட்டது. தவளையைப் பிடிக்க தண்ணீரில் நீந்தி வந்து கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களுக்குள் தவளை பாம்பின் வயிற்றிற்குள் போய்விடும் என்று கணித்தேன். பாம்பும் தன் வாயை திறந்தது. தவளை பாம்பின் வாயில் போகும் தருணம், எங்கிருந்தோ வந்தது ஒரு கழுகு பாம்பை தூக்கிகொண்டு பறந்தது. இப்போது பாம்பு கழுகுக்கு உணவாகிவிட்டது. நான் வியந்து போனேன். கடைசி மணி துளியிலும் கடவுளால் அற்புதம் செய்ய முடியும் என்ற உண்மையை இந்நிகழ்வு ஓங்கி ஒலிக்கிறது.

இது போன்ற அற்புதங்கள் மனிதவாழ்க்கையிலும் நாம் காண முடியும். எப்போது? நாம் கடவுளை நம்பும்போது. எல்லாம் முடிந்தது என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம், ஆனால் கடவுளை நம்புகிறவனுக்கு அந்த முற்றுப்புள்ளியே ஒரு கோடாக மாறும். ஆகையினால் தான் சங்கீதக்காரன், ‘இஸ்ரவேலே கர்த்தரை நம்பு’ என்று ஆலோசனைக் கூறுகிறார். மனிதரையும், படைக் கலன்களையும், மன்னர்களையும் நம்பி வீழ்ந்தவர்கள் ஏராளம். கடவுளை நம்பினவர்கள் வீழ்ந்து மடிவதில்லை. வீழ்ந்தாலும் எழுந்து நிமிர்ந்து நிற்பார்கள். கோலியாத் ஒரு பெலிஸ்தியன், மாவீரன். அவன் இஸ்ரவேலுக்கு எதிராக சவால் விட்டான். முறையாக போர்பயிற்சி பெற்ற எந்த இராணுவ வீரனும் கோலியத்தை எதிர்க்க முன்வரவில்லை. அவமானத்தினாலும், வெட்கத்தினாலும் கூனி குறுகி நின்றார்கள். எதிர்பாராத தருணத்தில் இராணுவத்தில் பணிபுரியும் சகோதரரை விசாரித்து செல்ல தாவீது வந்திருந்தார். சாதாரண ஆடு மேய்க்கிறவன். எந்த போர்பயிற்சியும் பெறாதவர். கோலியாத்தின் சவாலைக் கேட்டார் ஆத்திரம் கொண்டார். மன்னர் சவுலினிடம் அனுமதிப் பெற்று கோலியாத்தோடு மோதினார். கோலியத்தை வீழ்த்தி இஸ்ரவேலரை தலை நிமிர செய்தார்.

வாழ்க்கையில் சந்தித்த தொடர் தோல்விகள், இனி ஒன்றுமே செய்வதற்கில்லை என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். நான் இனி இந்த கடன் பிரச்சனைகளிலிருந்து மீள முடியாது என்று தீர்மானித்திருக்கலாம். இந்த நிலைமைகள் மாற இந்நாளில் கர்த்தர் நம்முடன் பேசுகிறார். “என்னை நம்பு” என்று. நாம் கர்த்தரை நம்பும்போது அவரே நமக்கு துணையாகிறார். ஒவ்வொரு காரியத்திலும் ஆண்டவர் மாற்றத்தையும், திருப்புமுனையையும் தந்தருள்வார். தோல்விகள் வெற்றிகளாக மாறும் நமது துக்கம் சந்தோஷமாக மாறும்.

நாங்கள் நம்பும் கன்மலையாகிய கர்த்தாவே! நாங்கள் சந்திக்கும் தோல்விகளில், போராட்டங்களில் எங்கள் மனம் துவண்டுவிடாமல் உம்மில் உறுதியான நம்பிக்கை வைத்து வாழ அருள்புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...