கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 18 December 2012

வேத வசனமாகிய கண்ணாடி


ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். -(யாக்கோபு 1:23-24).

மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடியாகும். கண்ணாடி முன்பாக மணிக்கணக்காக நின்று தன்னை அழகுப்படுத்தி பார்த்து கொள்வாள் பெண். மனிதனும் தன் முகத்தை விதவித கோணங்களில் வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று திருப்தியாகும் வரைக்கும் முகத்தை அப்படி சீவி, இப்படி சீவி அழகு படுத்தி, பின் அவ்விடம் விட்டு போகிறான்.

ஒரு கண்ணாடி ஒருவரின் உருவத்தை தன்னிடத்தில் வாங்கி கொண்டு, பின்பு அவருடைய உருவத்தை அவர் இருக்கிற வண்ணமாக பிரதிபலிக்கிறது. ஒருபோதும் ஒரு மனிதனை அழகுப்படுத்தியோ, ஒரு மனிதனை அசிங்கப்படுத்தியோ காட்டுவதே இல்லை. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அது வெளிப்படுத்துகிறது.

இந்த கண்ணாடி மாத்திரம் இல்லாதிருந்தால் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நாம் அறியாமல் போயிருந்திருப்போம்! நம்மை அழகுப்படுத்தி கொண்டிருக்க மாட்டோம். முகத்தில் இருக்கிற கறையையோ, அப்பியிருக்கிற பவுடரையோ துடைத்து கொண்டிருந்திருக்க மாட்டோம். அத்தனை முக்கியமானதாக கண்ணாடி விளங்குகிறது.

வேத வசனம் கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டு மேற்கண்ட வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் திருவசனத்தை கேட்டும் அதன்படி செய்யாதவனானால் அவன் ஒருவன் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு, தன்னிடத்தில் இருக்கிற குறைகளை கண்டும், அதை சரி செய்யாதிருக்கிறவனைப் போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது.

'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது' (எபிரேயர் 4:12). ஆம், வேத வசனம் ஒரு மனிதனிடத்திலுள்ள இருதயத்திலுள்ள நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறபடியால், அது அவனிடத்தில் உள்ளதை அவனுக்கு தெரிவிக்கிறது.

நாம் நம்முடைய வெளி உருவத்தை பார்ப்பதற்கு கண்ணாடி உள்ளது. ஆனால் இருதயத்தில் உள்ளில் இருக்கும் காரியங்களை வேத வசனமே கண்ணாடியை போல வெளிப்படுத்துகிறது. எப்படி நம் உருவத்தை கண்டு, சரி செய்ய வேண்டிய காரியத்தை சரி செய்கிறோமோ, அதுப்போல நம்முடைய இருதயத்தில் காணப்படும் காரியங்களை வேதம் வெளிப்படுத்தும்போது அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.

'எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?' (எரேமியா 17:9). ஏனெனில் அப்படிப்பட்ட 'இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்' (மத்தேயு 15:19). ஆம், இருதயத்தின் உள்ளிருந்து தான் இப்படிப்பட்டதான அசுத்தங்கள் வெளிப்படும். வெளியே மனிதனை பார்ப்பதற்கு மிகவும் நல்லவனாக, சாதுவாக இருப்பான். ஆனால் இருதயத்திற்குள்ளேயோ எல்லாவற்றையும் அடக்கி வைத்து கொண்டிருப்பான். இவற்றில் வேத வசனம் நம்மை குறித்து வெளிப்படுத்தும் காரியத்திற்கு நாம் செவி கொடுத்து, எந்த துர்க்குணங்களாவது நம்மில் இருந்தால் அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...