கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 29 November 2012

இயன்ற மட்டும்

என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். - (ரோமர் 1:15).

ஒரு வாலிபன் ஒரு கனவை கண்டான். அவன் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டவன். பாவங்களற கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நித்திய ஜீவனை பெற்று கொண்டவன். அவன் கண்ட கனவில், நியாயத்தீர்ப்பு நாளில் அவன் நிற்கிறதை போலவும், அவனுடைய முறை வந்தபோது, தேவன் அவனை பார்த்து, சில கேள்விகளை கேட்டப்பின், பரலோகத்தில் அவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.

அவன் அப்படி கடந்து சென்றபோது, அவனுக்கு பின்னால் அவனுடைய உயிர் நண்பன் கர்த்தருக்கு முன்பாக நிற்பதையும், அவன் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளாததால், அவன் நித்திய ஆக்கினைக்கு தள்ளப்பட்டதையும் கண்டான். அவனுடைய நண்பனின் கண்களில் கண்ணீர்! அவனது பார்வை அந்த கிறிஸ்தவ வாலிபனின் இருதயத்தை துளைத்தது! 'எத்தனை நாட்கள் நான் உன்னோடு படுத்து உறங்கினேன், எத்தனை நாட்கள் நாம் ஒன்றாக சேர்த்து கழித்தோம்? ஒரு நாளாவது எனக்கு நீ கர்த்தரை குறித்து அறிவிக்க வில்லையே?' என்று பார்த்து கேட்டதை போன்று உணர்ந்தான். 'ஐயோ, நான் அந்த நண்பனோடு சேர்ந்து கர்த்தரை குறித்து அறிவிக்க எனக்கு கொடுக்கப்பட்ட தருணங்களை வீணாக்கி போட்டேனே!' என்று கதறினான்.

(பரலோகத்தில் கண்ணீர் உண்டு, அந்த கண்ணீர் இதை போன்றதாய்த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! வெளிப்படுத்துதல் 21:4) ஆனால் இனி சென்ற காலம் திரும்ப வரப்போவதில்லை! நித்திய அக்கினிக்கு சென்ற ஆத்துமா மனம் திரும்ப மீண்டும் ஒரு தருணம் கொடுக்கப்பட போவதில்லை! இப்படி நம் நண்பர்கள், உறவினர்கள், கணவர்கள், மனைவிகள், பிள்ளைகளை நாம் இழந்து போவோமானால் எத்தனை பரிதாப நிலைமையாயிருக்கும்!!!

'கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒருமுறை கேட்பதற்கு முன் இன்னொருவர் ஏன் பலமுறை கேட்க வேண்டும்' இக்கேள்வியை கேட்டவர் ஆஸ்வால்ட் ஸ்மித் என்ற தேவ ஊழியர். 'இயேசு என்ற வார்த்தையை கேள்விப்பட்டிராத ஜனங்கள் கோடிக்கணக்கில் இருக்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கவும், அறியவும் செய்வதில் என்ன நியாயம் உண்டு?' என்று தன் செய்தி ஒன்றில் ஆஸ்வால்ட் வாதிடுகிறார்.

இவருடைய கேள்வியில் நிச்சயம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வுலகம் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின் 2011 வருடங்களை கடந்தும் இன்னும் நம் தேச மக்கள் தொகையில் சொற்ப அளவில்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் உள்ளனர். அதாவது மூன்றறை இலட்சம் கிராமங்களுக்கு இன்னும் சுவிசேஷ நற்செய்தி சென்றடையவில்லை. இவர்களின் எண்ணிக்கை நாற்பது கோடிக்கும் அதிகம். இன்னும் குறிப்பாய் கூற வேண்டுமானால் நம் கிறிஸ்தவ ஊழியம் என்பது புறமார்கத்தினர் மத்தியில் செய்வதை காட்டிலும், கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியிலேயே முடங்கி கிடக்கிறது. சாப்பிட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் உணவுகளை ஆயத்தம் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம். ஜீவ அப்பமாகிய இயேசுவை தேடும் தரித்திரருக்கோ சுவிசேஷத்தை அறிவியாதபடிக்கு நம்மில் அநேகருடைய கண் சொருகி போய் இருக்கிறது.

நம் தேசம் இன்னும் சந்திக்கப்படாததற்கு பாவம், சாபம், விக்கிரக ஆராதனை என சாக்கு போக்கு சொல்லி தப்பி விடுகிறோம். ஆனால் அதற்கான காரணத்தை சரியாய் சொல்ல போனால் கிறிஸ்தவர்களாகிய நாம் செயல்படாததே காரணம்! பவுல் தான் அநேக ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கடன் பட்டுள்ளேன் என்றும் 'என்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க விரும்புகிறேன்' என்றும் கூறுகிறார். ஆம் மிஷனெரி ஊழியம் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டிய கட்டாய கடமையாகும்.

கடைசி நிமிடத்தில் அற்புதம்

'இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று, .......பவுல் அவர்கள் நடுவிலே நின்று...... உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றான்.' – (அப்போஸ்தலர் 27: 20 - 22).

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.

வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.
Related Posts Plugin for WordPress, Blogger...