கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 29 November 2012

கடைசி நிமிடத்தில் அற்புதம்

'இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று, .......பவுல் அவர்கள் நடுவிலே நின்று...... உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றான்.' – (அப்போஸ்தலர் 27: 20 - 22).

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.

வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

பிரியமானவர்களே, நானும் சாறிபாத் விதவையை போலத்தான் காணப்படுகிறேன் என்று கூறுகிறீர்களா? தேவன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் நாம் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும். அந்த விதவை பற்றாக்குறையின் மத்தியிலும் தேவனுடைய மனிதனுக்கு முதலில் கொடுத்தாள். பல சமயங்களில் நமது வாழ்க்கையிலும் எவ்வளவு சம்பாதிதத்hலும் பொத்தலான பையிலே போடுகிறோம். இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது ஆண்டவருக்காக கொடுக்க கற்று கொள்ள வேண்டும். வாழ்வின் கடைசி மணித்துளியில் வந்து நிற்கிறேன் என்று சொல்கிறீர்களா? மனிதர்களை நம்பி ஏமாந்து போனீர்களோ? கண்ணீரே உங்களுக்கு உணவாயிற்றோ? பிரச்சனைகளுக்கு முடிவு மரணம் தான் என எண்ணி சோர்ந்து போய்யுள்ளீர்களோ? தேவனின் பாதத்தில் சரணடையுங்கள். நூறு சதவிகிதம் அவரே கதி என்று அவர் பாதத்தில் விழுந்து விடுங்கள். விசுவாசத்தோடு அவருடைய வேளைக்காக காத்திருங்கள். ஏற்ற வேளையில் கட்டாயம் கர்த்தர் அற்புதம் செய்வார். ஆமென் அல்லேலூயா!

பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் - உன்னை
அதிசயமாய் நான் நடத்திடுவேன்

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னை காண்கின்ற தேவன்
கண்மணிப்போல உன்னை காப்பேன்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, மனிதர்களை நம்பி சோர்ந்து போய், எல்லா உதவியும் அற்று போயிருக்கும்போது, நீரே எங்கள் உதவி; என்று உம் பாதத்தில் வந்து சரணடையும்போது, நிச்சயமான உதவிகளை செய்யும் பரிசுத்தரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா. ஏற்ற வேளையில் எங்கள் தேவைகளை சந்தித்து அற்புதம் செய்யும் அற்புதரே உம்மையே சார்ந்து நாங்கள் ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் தேவைகளின் மத்தியிலும் கர்த்தருக்கென்று நாங்கள் கொடுத்து, அதினாலே அதிசயம் காண எங்களுக்கு கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...