கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 18 March 2013

லேசான உபத்திரவம்

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது'. - (2 கொரிந்தியர் 4:17).

.
இரண்டாம் உலகப்போரின் வெற்றியில்,அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ஐசன் ஹோவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதன் முதலாக இராணுவ பயிற்சியில் சேர்ந்தபோது தான் அங்கு படும் கஷ்டங்களை தினமும் தன் தந்தைக்கு கடிதமாக எழுதுவது வழக்கம். அதில் 'அதிகாலை 4 மணிக்கு எழும்ப வேண்டும். ஒரு நாளைக்கு 20 கி.மீ ஓட வேண்டும். மூன்று கி.மீ முள்வேலியினால் ஆன வலையில் முழங்கால் மற்றும் கைளினால் தவழ்ந்து சென்று கடக்க வேண்டும். சுமார் 40-45 டிகிரி வெப்பமுள்ள பாலைவனப்பகுதியில் பயிற்சி எடுக்கும்போது கிடைக்கும் ஆகாரம் 100 மில்லி பால் மட்டுமே'. இவ்வாறு தான் அனுபவிக்கின்ற கஷ்டங்களை கடிதமாக எழுதி அனுப்பினாலும் தந்தையிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. மூன்று மாதங்களில் அலுத்துப் போன ஐசன் நூறாவது கடிதத்தை 25 பக்கமுள்ள நீண்ட கடிதமாக எழுதினார். 'நீங்கள் இன்னும் இதற்கும் பதில் எழுதாவிட்டால், அல்லது இங்கிருந்து என்னை அழைத்து செல்லாவிட்டால், இதுவே என் கடைசி கடிதம். நான் என்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு சவப்பெட்டியில் வந்து சேர்வேன்' என்று எழுதி முடித்தார்.

.
இந்த நூறு கடிதங்களுக்கும் பதிலளிக்க அவரின் தந்தை ஒரு போஸ்ட் கார்டில் ஒரு சம்பவத்தை எழுதினார், 'இரண்டு பேர் சிறையிலடைக்கப்பட்டனர். ஒருவன் தன்னுடைய பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் வடித்து தலை கவிழ்ந்வாறே அவ்வறையின் மணலை பார்த்தே துக்கத்துடன் தன் நாட்களை கழித்தான். மற்றவனோ துருப்பிடித்த ஜன்னல் வழியாக ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்து அவற்றின் அழகினையும், வெளிச்சத்தையும் கண்டு, சந்தோஷத்துடன் காலத்தை கழித்தான். நீ யாரைப் போலிருக்க போகிறாய்?' என்று எழுதி கையெழுத்திட்டு மகனுக்கு அனுப்பி வைத்தார், இந்த கடிதத்தை படித்த ஐசன் உற்சாகமடைந்து, சந்தோஷத்துடன் இராணுவ பயிற்சியை முடித்து இருபதாம் நூற்றாண்டின் யுத்த வரலாற்றில் ஒரு நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டார். அமெரிக்க தேசத்தின் 34ஆவது ஜனாதிபதியாகவும் மாறினார்.

.
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ பாடுகளின் வழியாக அவர் கடந்து சென்றாலும் கிறிஸ்துவுக்காக அத்தனை பாடுகளையும் பொறுமையாக சகித்தார். அந்த பாடுகளை குறித்து அவர் சோர்ந்து போகாமல், கிறிஸ்து தன்னை அழைத்த அழைப்பில் உண்மையாக இருந்தபடியால், தான் பட்ட பாடுகளை, 'இக்காலத்து இலேசான பாடுகள்' என்று ஆச்சரியவிதமாக கூறுகிறார். மட்டுமல்ல, அந்த உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என விசுவாசித்தார்.நாமும் ஒருவேளை அநேக பாடுகளினூடே கடந்து சென்று கொண்டிருக்கலாம். பாடுகளையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியதாகத்தான் தோன்றும். சிறையில் இருந்த கைதி மணலை பார்த்தபடியே தன் வாழ்நாளை கழித்தது போன்று, துக்கத்திலேயே நம் வாழ்நாளை கழித்து விடும்படியாகவே நேரிடலாம். நாம் படும் பாடுகள் எதுவும் நிலையானதல்ல, ஒரு நாள் அவை நம்மை விட்டு கடந்து போகத்தான் செய்யும். ஆனால் இப்படி ஆயிற்றே என்று நாம் துக்கத்தில் மூழ்கிப் போனால் யாராலும் நமக்கு உதவ முடியாது.ஆனால் ஆகாயத்து நட்சத்திரங்களை பார்த்து, தன் துக்கத்தை மறந்து வெளியே வந்த கைதியை போல, நாம் கர்த்தரையே நோக்கி பார்த்து லேசான பாடுகள் என்று அவைகளை விட்டு நாம் வெளியே வரவேண்டும். அதிலேயே மூழ்கிப் போய்விடக்கூடாது. 'அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்' (2 தீமோத்தேயு 2:12) என்ற வார்த்தையின்படி, பாடுகளை சகித்தோமானால், அவரோடேக்கூட ஆளுகையும் செய்வோம் என்ற நம்பிக்கையோடே 'இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்' (ரோமர்8:18)  என்று பவுல் எழுதியபடி வரப்போகும் மகிமையை நினைத்து, இப்போது படும் பாடுகளை 'அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் லேசான உபத்திரவங்கள்' என்று எண்ணத்தில் வைத்து, அவற்றை மகிழ்ச்சியோடே எதிர்கொண்டு, சகித்து, கிறிஸ்துவோடேக்கூட ஆளுகை செய்ய நம்மை தகுதிப்படுத்துவோமாக! ஆமென் அல்லேலூயா!

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் 
இந்த லேசான உபத்திரவம் 
சோர்ந்து போகாதே நீ 
சோர்ந்து போகாதே 
ஈடு இணையில்லா மகிமை 
இதனால் நமக்கு வந்திடுமே

ஜெபம் 
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கு வரும் பாடுகளில் நாங்கள் அதை பொறுமையோடே சகித்து, அதி சீக்கிரத்தில் இந்த பாடுகள் எங்களை விட்டு நீங்கி போய் விடும் என்று விசுவாசித்து, பாடுகளை பொறுமையோடே சகிக்கும்படி கிருபை செய்யும். என் கிருபை உனக்கு போதும் என்று சொன்ன கர்த்தரின் வார்த்தைகளை நினைவில் வைத்து, உம்முடைய கிருபையை சார்ந்து ஜீவிக்க உதவி செய்யும். பாடுகளை சகித்தோமானால் தேவன் எங்களுக்காக வைத்திருக்கிற மகிமையையும், கிறிஸ்துவுடனேக்கூட ஆளுகை செய்யவும் நாங்கள் கண்டு உம்மை மகிமைப்படுத்த எங்களை தகுதிப்படுத்துவீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
Related Posts Plugin for WordPress, Blogger...