கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 12 February 2013

பலவீனத்திலும் பெலன்

‘என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்’

தண்ணீர் சுமந்து ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கும் ஒருவர், இரண்டு பானைகளை ஒரு கம்பில் கட்டி, அதை தன் தோளின் மேல் சுமந்து, அந்த பானைகள் நிறைய தண்ணீர் எடுத்து கொண்டு வந்து, மேடான இடத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு கொடுப்பது வழக்கம். அதில் ஒரு பானையில் கீறல் விழுந்து இருந்தது. அதனால் அவர் கொண்டு வரும் தண்ணீர், வீடு வந்து சேரும்போது அந்த பானையில் பாதிதான் இருக்கும். மற்றொரு பானை பழுதில்லாமல் இருந்ததால் அதில் தண்ணீர் முழுவதுமாக வீடு வந்து சேரும்.
இப்படி இரண்டு வருடங்களாக அந்த தண்ணீர் கொண்டுவருபவர் ஒன்றறை பானைதான் தண்ணீர் தான் கொண்டு வர முடிந்தது. ஒருநாள் கீறல் இல்லாத பானை மிகவும் பெருமையுடன், ‘நீ இருந்தென்ன, பாதி பானைதான் தண்ணீர் கொண்டு வருகிறாய். நான் பார், முழு பானை தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று பெருமிதத்துடன் சொல்லி கொண்டது. அதை கேட்ட கீறல் விழுந்த பானைக்கு துக்கம் தாள முடியவில்லை. தண்ணீர் மொள்பவர் தண்ணீரை எடுக்கும் போது, அவரிடம், ‘ஐயா, என்னால் உங்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை, நான் கீறல் விழுந்த பானை, தண்ணீரை சரியாக வைக்க முடியவில்லை. வழியெல்லாம் தண்ணீரை சிந்தி பாதி தண்ணீர்தான் தினமும் என்னால் வைக்க முடிகிறது. என்னால் உங்களுக்கு மிகுந்த கஷ்டம்’ என்று வருத்தப்பட்டது.

அதற்கு அந்த தண்ணீர் சுமப்பவர், ‘நாம் போகும் பாதையின் ஓரத்தில் உன் பக்கம் மாத்திரம் பூக்கள் பூத்து குலுங்குவதை பார்த்தாயா?’ ! மற்ற பக்கம் பூக்கள் இல்லாததை பார்த்தாயா? நீ கீறல் விழுந்த பானை என்று எனக்கு தெரியும், அதை எனக்கு சாதகமாக பயன்படுத்தி நல்ல பூக்களை கொடுக்கும் விதைகளை அந்த பாதையில் நட்டேன். அப்போது உன்னிலிருந்த வழியும் தண்ணீர் அதற்கு போதுமானதாக இருந்து, நல்ல பூக்களை கொடுத்தது, இப்போது பார், அந்த பூக்கள், எஜமானருடைய மேஜையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு அந்த இடத்தையே அழகு படுத்துவதை!’ என்றார்.

நாம் அனைவரும் கூட ஏதாவது ஒரு வகையில் குறைவுபட்டவர்கள்தான். அதனால் நான் குறைவுபட்டவன் என்னால் என்ன செய்ய முடியும்? என்று நினைத்து உட்கார்ந்திருந்தால் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆனால் குறைவுபட்டிருந்தாலும் குயவனாகிய நம் தேவனின் கரத்தில் நம்மை அர்ப்ணித்து ‘அப்பா என்னை உபயோகியும்’ என்று அவரிடம் ஜெபிக்கும்போது, அந்த தண்ணீரை சுமப்பவரை போல நம் தேவன் நம் குறைவுகளிலும், அருமையாக நம்மை உபயோகப்படுத்தி எஜனமானனுடைய மேஜையை அலங்கரிக்க வைப்பார்.

கிதியோன் மீதியானியருக்கு பயந்து, ஆலைக்கு சமீபமாக போரடித்து கொண்டு இருந்தபோதுதான் கர்த்தர் அவனை தம்முடைய ஊழியத்திற்கு அழைத்தார். அவர் அவனை ‘அட கோழையே’ என்று அழைக்கவில்லை, அவர் அவனை "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று தான் அழைத்தார் (நியாயாதிபதிகள் 6:12) அவன் பயந்துதான் இருந்தான். ஆனால் கர்த்தர் அவனை பராக்கிரமசாலியாகவே பார்த்தார். ஆம், நாம் குறைவுள்ளவர்கள்தான் ஆனால் கர்;த்தர் நம்மை குறைவுள்ளவர்களாக பார்க்காமல், நம்மை ஜெயங்கொள்கிறவர்களாக, பராக்கிரமசாலிகளாக, விசுவாச போர் வீரர்களாகவே காண்கிறார்.

நம்முடைய குறைகளிலும் பெலவீனத்திலும் அதையே நினைத்து கொண்டு இருந்தால், அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு தூசியை விட்டு எழுந்து, ‘அப்பா என்னை உபயோகியும்’ என்று அவருடைய பாதத்தை பிடித்துக்கொண்டால், நிச்சயமாக நம்மை உபயோகிப்பார்.
Related Posts Plugin for WordPress, Blogger...