கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 24 August 2012

வேதசித்தத்திற்கு முழுமையாய் அர்ப்பணித்தல்

கி.பி. 16ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் திருச்சபையில் சீர்த்திருத்தம் ஏற்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் பரவலாக யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் சீர்திருத்தவாதி ஜோன் கால்வின் (John Calvin 1509-1564) பாரீசிலிருந்து ஸ்டிராஸ்பேர்க் எனுமிடத்திற்குச் செல்கையில் ஜெனீவா நகரின் ஒருநாள் இரவு தங்கவேண்டியதாயிற்று. அன்றிரவு ஜோன் கால்வின் இன்னுமொரு சீர்த்திருத்தவாதியான வில்லியம் ஃபெரெல் என்பாரைச் சந்தித்தார்.

புரட்டஸ்தாந்து சபையில் குருவானவராக இருந்த வில்லியம் ஃபாரெல், தன்னுடன் தங்கியிருந்து தனது பணிகளுக்கு உதவிசெய்யும்படி ஜோன் கால்வினிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜோன் கால்வின் அவ்வேண்டுகோளுக்குச் சம்மதிக்கவில்லை. இதனால் இவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

கடைசியில் வில்லியம் ஃபெரெல் சற்று கடுமையான குரலில் “நீ உன்னுடைய விருப்பப்படி செயல்படுகிறாய். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நாமத்தில் நான் இன்று உனக்கு சொல்வது யாதெனில், இந்நகரில் நான் செய்யும் கர்த்தருடைய பணிக்கு நீ உதவி செய்யாவிட்டால் நீ தேவனுடைய வேலையை செய்யாமல் உன்னுடைய வேலையை செய்ய முற்படுவதனால் அவர் உன்னைச் சபித்துவிடுவார்.” என்று கூறினார்.

வில்லியம் ஃபெரெலின் இவ்வார்த்தைகள் ஜோன் கால்வினுடைய மனதைக் கடுமையாக தாக்கியமையால், அவர் தன் மரணம் வரை ஜெனீவா நகரில் தனது சீர்த்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். வில்லியம் ஃபெரெலின் வார்தைகளைப் பற்றி பிற்காலத்தில் ஜோன் கால்வின் எழுதும்போது “நான் என்னுடைய வழியில் செல்வதைத் தடுக்கப் பரலோகத்தின் தேவன் தன் கரத்தின் என்மீது வைத்தது போல உணர்ந்தேன். இதனால் நான் எனது பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ வாழ்க்கை வேதசித்தத்திற்கு அடிபணிந்து வாழும் ஒரு வாழ்க்கையாகும். நமது சித்தத்தை முற்றிலுமாய் அகற்றிவிட்டு தேவசித்தத்திற்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும். இதனால்தான் “ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்“.(எபே. 5:17) என்று வேதமும் நமக்கு அறிவுறுத்துகின்றது.

இழக்கக்கூடாத புத்தகம்

ஸ்டேன்லி என்பார் ஆபிரிக்கா கண்டத்தினூடாக ஒரு பிரயாணத்தை மேற்கொள்ளும்போது 180 இறாத்தல் நிறையுடைய 73 புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். 300 மைல்கள் பிரயாணம் செய்தபின்னர், தனது புத்தகப் பொதிகளைச் சுமந்து வந்தவர்களின் தேகநிலை காரணமாகப் புத்தகங்களை வீசிவிட வேண்டியிருந்தது.
ஸ்டேன்லியின் பிரயாணத்தின்போது அவரது புத்தகங்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே சென்றது. கடைசியில் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது அவருடைய வேதப்புத்தகம். அதை அவர் இழக்கத் தயாராக இருக்கவில்லை. அவர் தனது பிரயாணத்தின்போது மூன்று தடவைகள் அவ்வேதப் புத்தகத்தை முழுமையாக வாசித்துள்ளார்.
உண்மையில், நாம் வாழ்வில் எதை இழந்தாலும் நமது வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது. ஒரு தடவை லண்டனிலுள்ள பிரபலமான பத்திரிகை ஒன்றின் ஆசிரியர், முக்கியமான நூறு பேருக்கு வினாத்தாள் ஒன்றை அனுப்பினார். அதில் நீங்கள் மூன்று வருட காலம் சிறைத்தணடனை அனுபவிக்க வேண்டி வரும் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மூன்று புத்தகங்களை மட்டுமே உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும். நீங்கள் எந்தப் பத்தகங்களை எடுத்துச் செல்வீர்கள்? முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை நிரற்படுத்துக.“ என்று கேட்கப்பட்டிருந்தது.
பத்திரிகை ஆசிரியருக்குப் பதிலளித்தவர்களின் 98 பேர் முதலில் வேதாகமத்தின் பெயரையே எழுதியிருந்தனர். இவர்கள் ஒரு சிலர் மட்டுமே மார்க்க விடயங்களில் ஆர்வம் மிக்கவர்கள். பெரும்பாலானவர்கள் நாத்திகர்களும், கடவுளைப்பற்றிய சிந்தனையற்றவர்களுமாவார். அப்படியிருந்தும் அவர்கள், தாம் வேதப்புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். வேதப்புத்தகம் மட்டுமே நெருக்கடியான சூழ்நிலைகளில் உற்ற நண்பனாயிருக்கும். எனவே நாம் ஒருபோதும் வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவி்டக்கூடாது.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங். 19:7)
நன்றி – சில சம்பவங்களில் சில சத்தியங்கள்

கழுகு கூடு

கழுகு கூடு கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? அதை நாம் பார்த்திருக்க நியாயமில்லை. அது கட்டும் முறை மிகவும் அருமையானது.
.
தாய் கழுகு தன் கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது, நாம் நினைத்திராதபடிஇ முட்களையும், சிறுசிறு கற்களையும், கிளைகளையும் கொண்டு வந்து, கட்ட ஆரம்பிக்கும். அதைக் கட்டி முடித்தப்பின், அதன் மேல், மெதுவான மிருதுவான பஞ்சு, மெலிதான இறகுகள், தான் சாப்பிட்ட மிருகத்தின் தோல் இவற்றைக் கொண்டு அதன் மேல் பரப்பி, தன் முட்டைகளை சுகமாக இருக்கும்படி, அவற்றை ஒழுங்குப்படுத்தும். பின் முட்டையிட்டு, அதை அடைக்காத்து, அது குஞ்சுகளாக வந்து, அவற்றிற்கு இரையைக் கொண்டு வந்து ஊட்டி, அவற்றை வளர்க்கும். அவை வளர்ந்து, பறக்கும் நிலையை அடைந்தவுடன், தாய்க் கழுகு தன் கூட்டை கலைக்க ஆரம்பிக்கும். குஞ்சுகள் சொகுசாக இருந்த பஞ்சு மற்றும், மெலிதான இறகுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு விட்டு, முட்களையும், சிறுசிறு கூர்மையான கற்களையும் வெளியே வைத்துவிடும். அந்த மெத்தைப் போன்றவை போனவுடன், குஞ்சுகளுக்கு, கூடு குத்துகிற இடமாக, அவை தங்கியிருக்க முடியாத இடமாக மாறிப் போகும். அப்போது அவை தாமாக அந்தக் கூட்டைவிட்டு பறக்க ஆரம்பித்து, தன் இரையைத் தேட ஆரம்பிக்கும். பறக்கும் போது ஆரம்பம் மிகவும் கடினமாக இருக்கும் பறக்க எத்தணிக்கையில் குஞ்சுகள் கிழே விழுவதற்கு முற்ப்படும் அந்த வேளையில் தாய் கழுகு தன் செட்டைகளின் மேல் தன் குஞ்சுகளை சுமந்து செல்லும் ஆகவே தான் வேதாகமம் இப்படிக் கூறுகின்றது “ கழுகு தன் கூட்டை கலைத்து தன் குஞ்சுகளை செட்டைகளில் சுமந்து கொண்டு போவது போல தேவன் தாமே அவர்களை சுமந்தார். என்பதாக…
அன்பானவர்களே : நம்மில் கூட சிலர், அந்த கழுகின் குஞ்சுகளைப் போல தங்களுக்கு கிடைத்த கூட்டில் சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். எழுந்து பறக்கக் கற்றுக்கொள்வோம்

தேவன் தாமே நம்மை சுமந்து சென்று பாதுகாத்தருள்வார்

ஆயுசு நாட்கள்


ஒரு வேடிக்கையான கதை உண்டு. தேவன் முதலாவது ஒரு காளையை உருவாக்கினார். உருவாக்கி, அதனிடம் ‘நீ நாளெல்லாம் ஒரு விவசாயின் கீழ் இருந்து சூரியனுக்கு கீழே நிலத்தை உழுது உழைக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக 50 வருடங்கள் தருகிறேன்’ என்று கூறினார். அதற்கு காளை, ‘என்னது, இத்தனை கஷ்டமான வேலை செய்வதற்கு எனக்கு ஏன் ஐம்பது வருடங்கள்? வேண்டாம், வேண்டாம் எனக்கு வாழ்நாள் இருபது வருடங்கள் போதும், முப்பது வருடங்களை உமக்கே திருப்பி தருகிறேன்’ என்றது. தேவனும் அதற்கு ஒத்து கொண்டார்.

அடுத்ததாக அவர் ஒரு குரங்கை உண்டாக்கினார். ‘குரங்கு நீ மனிதர்களை சிரிக்க வைக்க வேண்டும். நீ செய்கிற சேட்டைகளை பார்த்து அவர்கள் சிரிக்க வேண்டும். உனக்கு 20 வருடங்களை வாழ்நாளாக தருகிறேன்’ என்றார். அதற்கு குரங்கு, ‘இந்த வேலைக்காக நான் இருபது வருடங்கள் உயிர் வாழ வேண்டுமா? பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்களை உமக்கே தருகிறேன்’ என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.

அடுத்ததாக அவர் ஒரு நாயை உண்டாக்கினார். உண்டாக்கி, ‘நீ நாள் முழுவதும் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களை பார்த்து குரைத்து கொண்டிருக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக இருபது வருடங்களை தருகிறேன்’ என்றார். அதற்கு நாய் ‘வாழ்நாளெல்லாம் நான் வீட்டு வாசற்படியில் இருந்து என் தொண்டை தண்ணீர் வற்றி கத்தி கொண்டு இருக்க வேண்டுமா? எனக்கு பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்ளை உமக்கே திருப்பி தருகிறேன்’ என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.

அடுத்ததாக மனிதனை உண்டாக்கினார். அவனிடம், ‘நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நேராநேரம் நன்கு சாப்பிட்டு, வாழ்க்கையை அனுபவி. உனக்கு 20 வருடங்களை தருகிறேன்’ என்றார். அதற்கு மனிதன், ‘ஒன்றும் செய்யாமல் ஜாலியாக இருப்பதற்கு இருபது வருடங்கள் மட்டும் தானா? காளை வேண்டாம் என்று கூறின முப்பது வருடங்கள், நாய் வேண்டாம் என்று கூறின 10 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று கூறின பத்து வருடங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எனக்கு தாரும், நான் அவற்றை எடுத்து கொள்கிறேன. அப்போது மொத்தம் எழுபது வருடங்கள் ஆகுமல்லவா?’ என்றான். தேவனும் ஒத்து கொண்டார்.

அதனால் தான் நாம் முதல் 20 வருடங்கள் ஒன்றும் செய்யாமல், உறங்கி, தூங்கி, வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அடுத்த முப்பது வருடங்கள் காளையை போல கடுமையாக உழைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நம் பேர குழந்தைகளிடம் குரங்கை போல முகத்தை காட்டி, அவர்களை சிரிக்க வைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நாயை போல வீட்டிலிருந்து, காவல் காத்து கொண்டிருக்கிறோம்.

இந்த கதை வேடிக்கையாக இருந்தாலும், தேவன் நமக்கு கொடுத்த வருடங்கள் எழுபது, பெலத்தின் மிகுதியால் எண்பது வயது என்று வேதம் கூறுகிறது. இந்த எழுபது வருட வாழ்க்கையில் நாம் எல்லா பாடுகளையும் பட்டு, வாழ்ந்து முடித்தாலும், அதன் மேன்மை வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம் என்று தேவ தாசனாகிய மோசே கூறுகிறார். எழுபது வயதிற்கு மேல் வியாதியும், படுக்கையில் விழுந்து யாராவது திருப்பி விட்டால்தான் திரும்ப முடியும் என்ற நிலைமையும் இருந்தால் மிகவும் வருத்தமும் சஞ்சலமுமே! இதில் இன்னும் வருடங்கள் கூட்டப்பட்டால் அப்பப்பா எத்தனை வேதனை! யாரும் படுக்கையில் விழுந்து, மற்றவர்களுக்கு பாரமாக, நாமே நமக்கு பாராமாக இருந்து விடக்கூடாது! தேவன் அப்படிப்பட்ட வாழ்வை யாருக்கும் தராதிருப்பாராக!

தேவன் கிருபையாய் கொடுத்த இந்த வாழ்க்கையில், மனிதனுக்கு மட்டுமே அதை அவன் சித்தத்திற்கு செலவிடும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறார். மிருகங்களும் தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை. நாம் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அதை தேவன் கையில் ஒப்புக்கொடுத்து வாழ்ந்தோமானால் அதற்கு பின் வரும் வாழ்வில் நமக்கு பலன் உண்டு. தற்போது ஏனோதானோ என்று வாழ்ந்து, பின்வரும் வாழ்வில் பலனற்று போவதை விட இப்போதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அருமையான வாழ்வை அருமையான பாதுகாக்கும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தின்படி வாழும்போது, அவர் நம் வாழ்வை பொறுப்பெடுத்து கொள்வார்.

இந்த உலகில் நாம் வாழும் வாழ்கை ஒருமுறைதான். அதை பலர் சிறக்க வாழவும் முடியும். பலர் வெறுக்க வாழவும் முடியும். நம்முடைய கைளில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையை தேவன் நாமம் மகிமைப்பட வாழ்வோம். அவருடைய நாமத்திற்கு சாட்சியாக வாழ்வோம். ஒவ்வொரு நாளும் தேவனுடைய பரிசு என்று அவருக்காக, அவரை துதித்து, அவருக்கென்று வாழ்வோம். மறுமையின் வாழ்வில் அவர் நமக்கு சிறந்த பலனை தருவார். ஆமென் அல்லேலூயா!

நாவடக்கம்

ஒரு சிறுவனுக்கு எப்போதும் அதிகக் கோபம் வரும் அவனுடைய தந்தை எத்தனையோ முறை அவனிடம் அது நல்லதல்ல என்றுச் சொல்லிப் பார்த்தார். அவனுக்கு கோபம் கட்டுப்படவே இல்லை. ஒரு நாள் அவன் தந்தை ஒரு பை நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், தங்கள் வீட்டிற்கு வெளியே வெள்ளைச் சாயம் போட்ட கட்டை வேலியின் மீது, ஒரு ஆணியை அடிக்கச்சொன்னார். அதன்படி, அவன் அடித்துபோது, முதல் நாளில் 37 ஆணிகளை அடித்தான்.

அடுத்த சில வாரங்களில், அவன் கோபம் குறையத் தொடங்கியது. ஏனெனில் ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், வெளியேப் போய் ஆணிகளை அடிப்பதற்கு பதிலாக, கோபத்தை கட்டுபடுத்துவது அவனுக்கு எளியதாக கண்டது. அதை அவன் தகப்பன் கண்டபோது, அவனிடம் ஒவ்வொரு நாளும் போய் அவன் அடித்த ஆணிகளை பிடுங்கச் சொன்னார். அவன் அப்படியே எல்லாவற்றையும் பிடுங்கி முடித்தான்.

அன்று சாயங்காலம் அவன் தந்தை அவனது கையைப் பிடித்து அவனைக் கூட்டிக் கொண்டுப் போய், ‘மகனே, நீ செய்தக் காரியம் நல்லது, ஆனால்பார், நீ ஆணி அடித்த இடத்தை, இந்த அழகிய வேலி இனி அப்படி இருக்கப் போவது இல்லை. நீ ஆணியடித்ததினால் ஏற்பட்ட துளைகளைப் பார், அது துளைகளோடு காட்சியளிக்கிறது. அப்படித்தான் நீ அன்புகூருகிற ஒருவரிடம், நீ கோபத்தோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும், இந்த துளைகளைப் போல், இருதயத்தில் மாறாத வடுகளை ஏற்படுத்துகிறது. நீ கோபம் போன பிறகு எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடுக்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கும், ஆகவே கோபத்தைக் குறைத்து கோபமான வார்த்தைகளை பேசாதபடிக் காத்துக் கொள்’ என்று அவனுக்கு அறிவுரைக் கூறினார்.

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். – (யாக்கோபு 3:8-9) என்று வேதம் கூறுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவை சொந்தமாகக் கொண்ட ஜனம் நாவை அடக்கிக் கொள்ள பழக வேண்டும். தேவன் கொடுத்த நாவை மற்றவர்களை உற்சாகப்படுத்தவும், திடனற்றவர்களை தேற்றவும், தேவனை துதிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

இனிய நாவு எலும்பையும் நொறுக்கும் என்று நீதிமொழிகள் 25:15-ம் வசனத்தின் பின்பகுதியில் காணலாம். மற்றவர்களுக்கு பயன்படும் வார்த்தைகளையே பேசுவோம். மட்டுமல்ல, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் என்ற வேதம் நமக்கு கூறுகிறது. நாம் எதை பேசுகிறோமோ, அதன்படிதான் நடக்கும். நாம் மரணத்துக்கு ஏதுவான வார்த்தைகளை பேசினால், அதன் கனியைப் புசிப்போம். ஜீவனுக்கேதுவான் வார்த்தைகளை பேசினால் ஜீவனைப் பெறுவோம். உதாரணமாக, சங்கீதம் 23:6-ல் என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்’ என்று பார்க்கிறோம். அதைக் கூறுவதை விட்டுவிட்டு, என் தந்தைக்கு அல்லது தாய்க்கு இரத்த அழுத்த வியாதி இருக்கிறது, அல்லது சர்க்கரை வியாதி இருக்கிறது அதனால் என்னையும் அது தொடரும் என்று நம் வாயினால் அறிக்கை செய்வது மரணத்துக் ஏதுவான வார்த்தைகளைப பேசுவதுப் போலாகும். அதற்கு பதிலாக, டயபடீஸோ, அல்லது ஹைபர் டென்ஷனோ அல்ல, நன்மையும் கிருபையுமே என்னைத் தொடரும் என்று அறிக்கை செய்வது, ஜீவனுக்கேதுவான வார்த்தைகளைப் பேசுவதுப் போலாகும். இன்று வரை எங்கள் குடும்ப ஜெபத்தில், எங்கள் ஜெபங்கள் முடிந்தப் பிறகு நாங்கள் குடும்பமாக, 23ம் சங்கீதத்தை விசுவாச அறிக்கையாக சொல்லித்தான் முடிப்போம். ஆந்த அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதமானது. எங்கள் அறிக்கைக் கேட்டு தேவன் எங்களை ஆசீர்வதிககிறார். நீங்களும் அப்படி செய்யலாமே!

ஆகவே, நல்ல வார்த்தைகளைப் பேசுவோம், விசுவாச வார்த்தைகளைப் பேசுவோம், மற்றவர்களுக்கு ஆறுதலை தேறுதலைக் கொண்டு வருவோம். அதற்காகவே தேவன் நாவைப் படைத்தார் என்று விசுவாசிப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!

பாவத்தின் விளைவு

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
(நீதிமொழிகள் 23:32)

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கிராமத்திலே பாம்பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். தன்னிடமிருந்த ஒரு மலைப் பாம்பைக் கொண்டு வேடிக்கைக்காட்டி அதன் மூலம் வரும் பணத்தால் வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தார். பொது மக்கள் கூடுகின்ற இடத்திற்கு சென்று அப்பாம்பிடம் தன்னை சுற்றிக் கொள்ளவும், தன் மேல் ஏறவும் இறங்கவும் கட்டளையிடுவார். அவர் சொற்படியே பாம்பும் செயல்படும். மக்கள் இதை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்து காசுகளைக் கொடுப்பார்கள்.

இவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், ‘பாம்போடே விளையாடாதே, அது என்றாவது ஒருநாள் அதன் குணத்தைக் காட்டிவிடும். வேறு ஏதாவது நல்ல தொழிலை செய்து பிழை’ என்பார்கள். ஆனால் அவரோ அதை காதில் போட்டுக் கொள்ளாமல் வழக்கம் போல செய்து வந்தார். ஒரு நாள் மக்கள் மத்தியில் பாம்போடு வேடிக்கைக் காட்டி தன்னைச் சுற்றிக் கொள்ளுமாறு பாம்பிற்கு கட்டளையிட்டார். அதுவும் அவரது கால்களில் எறி கழுத்து, தலை வரை சுற்றிக் கொண்டது. அதோடு அவர் மக்களை மகிழ்விக்க நடனமாடினார். சில நிமிடங்களில் இறங்க கட்டளையிட்டார். ஆனால் பாமபு ஆக்ரோஷமாக அவரை இறுக்கியது. எலும்புகள் நொறுங்கின. வாயிலிருந்து இரத்தம் வடிய மாண்டு போனார்.

பிரியமானவர்களே, நம்மில் சிலர் கூட சிற்றின்பத்திற்காகவும், நண்பர்களின் உறவு அறுந்துப் போகக் கூடாது என்று எண்ணியும் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கலாம். அது போதைப் பொருள், அசுத்த சினிமா, ஆபாச புத்தகங்கள், மதுபானம், கூடாத நட்பு, பான் பராக் என ஏதோ ஒன்றாக இருக்கலாம். வேதமும் தேவனும் அநேக முறை அதை விட்டுவிட எச்சரித்தும் அதை கேட்காமல், பாவத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். நண்பரே, இப்போது இன்பமாய் தோன்றும் இச்செயல்கள், ஒரு நாள் உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடும். தனிமையில் குற்ற உணர்வு உங்களை உருக்குலைத்து விடும். பாவம் உங்கள் எதிர்கால இலட்சியத்தை அழித்து விடும். பாவம் உங்களைக் குறித்து தேவன் வைத்துள்ள திட்டத்தை சிதைத்து விடும். முடிவில் பாவம் உங்களை பாதாளத்தில் தள்ளிவிடும்.

பாம்போடே வருடக்கணக்கில் பழகின அவரின் நிலை ஒரு நாளில் பரிதாபத்திற்குள்ளானதல்லவா? பாவம் தன் உண்மை சுபாவத்தை காண்பிக்குமுன் மனம் மாறி, அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து வெற்றியை பெற்று விட முயற்சியுங்கள். ஆரம்பத்தில் கடினமாக தோன்றும் காரியம் மனம் வைத்து விடா முயற்சி செய்யும்போது, அதை விட்டு விலக முடியும். பரிசுத்த ஆவியானவின் துணையுடன் அவற்றை வெல்ல ஜெபத்தோடு பாவ வழக்கங்களைவிட்டுவிட ஜெபியுங்கள். ‘கர்த்தருடைய கிருபை அவருடைய உடன்படிக்கையைக்கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது’ – (சங்கீதம் 103:18). அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே அவருடைய கிருபை இருக்கிறதாம். நினைத்தாலே போதும் கர்த்தருடைய கிருபை இறங்கி வந்து, உங்களை அந்த பாவக் கட்டுகளிலிருந்து, விடுவிக்க தேவன் உதவி செய்வார்.

உங்கள் வாலிப நாட்களை வீணாக கெடுத்து, வாழ்ககையை கெடுத்துக் கொள்ளாதிருங்கள். அனேக வாலிபர், இந்த பழக்கங்களை ஆரம்பித்து பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதைப்பார்த்து கண்ணீரோடு ஜெபித்திருக்கிறேன். அன்பு நண்பர்களே, வேண்டாம் இந்த கொடிய பழக்கங்கள்! அது உங்கள் உறவுகளை கண்ணீர் விட வைக்கும், அவர்களை துணையற்றவர்களாக்கி விடும். சாத்தானின் தந்திரத்தில் சிக்கி உங்கள் வாழ்க்கையை நரகமாக்கி விடாதிருங்கள். ஆரம்பத்தில் சுவையாகத் தோன்றும் இவைகள் உங்கள் சுகத்தை திருடிவிடும். ஒருமுறை போன சுகம் திரும்ப உங்களுக்கு வராது. உங்கள் சரீர பாண்டங்களை பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகவே தயவு செய்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு உங்களை கறைப்படுத்திக் கொள்ளாதிருங்கள். இவற்றிலிருந்து விடுபட ஒரே வழி இயேசுகிறிஸ்துதான். அவரை அண்டிக்கொள்ளுங்கள். பரிகாரியாகிய அவர் நீங்கள் விடுபடும்படி உதவி செயவார்!

நன்மையானவைகளே

அநேக வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் கிளார்க் என்பவர் குடும்பமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு, அநேக நாட்களாக அவரும், அவருடைய மனைவியும், அவருடைய ஒன்பது பிள்ளைகளும் பணத்தை சேமித்து வைத்து, ஸ்காட்லாந்திலிருந்து புறப்படும் ஒரு புதிய கப்பலில் அமெரிக்கா செல்வதற்காக ஒழுங்குகள் செய்திருந்தார்கள். அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருந்தார்கள்.

சரியாக அவர்கள் செல்வதற்கு ஏழு நாட்கள் இருக்கும்போது அவருடைய கடைசி மகனை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது. அவனை பரிசோதித்த வைத்தியர், ஒரு வேளை ரேபீஸ் (Rabies) வருவதற்கு சாதகங்கள் இருக்கிறது என்று பதினான்கு நாட்கள் (Quarantine Period) அவனை கவனிக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.

அதை கேள்விப்பட்ட கிளார்க் மிகவும் விரக்தி அடைந்தார். இத்தனை நாட்கள் குருவி போல சேர்த்து வைத்து, ஆசை ஆசையாய் போக வேண்டும் என்று இருந்தபோது இப்படி ஆகி விட்டதே என்று தன் மகனை ‘உன்னால் தான் என் கனவு நிறைவேறவில்லை’ என்று கடிந்து கொண்டு, ‘ஏன் தேவனால் இதை தடுத்து நிறுத்த முடியவில்லை’ என்று கர்த்தர் மேலும் கோபம் கொண்டார்.

ஐந்து நாட்கள் கழித்து, உலகமே அதிர்ச்சி அடையும் செய்தி வந்தது. மிகவும் விலையுயர்ந்த, மூழ்கவே முடியாது என்று எஞ்சினியர்கள் சிபாரிசு செய்த டைடானிக் கப்பல் மூழ்கி போனது என்றும் அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கானவர்களில் ஆறு பேர் மாத்திரமே தப்பினார்கள் என்றும் செய்தி வந்தது. கிளார்க் குடும்பத்தினர் அந்த கப்பலிலே பயணம் செய்யவே ஒழுங்கு செய்திருந்தாhர்கள். கிளார்க் அவர்களுக்கு அப்பொழுதுதான் புரிந்தது, ஏன் கர்த்தர் அவர்கள் செல்வதற்கு தடை செய்தார் என்று. மகனை கட்டி பிடித்து முத்தமிட்ட அவர் கர்த்தருக்கும் நன்றி சொன்னார்.

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் வருடக்கணக்கில் கனவு கண்டு வந்த காரியம் கைக்கூடி வரவில்லையா? நீங்கள் எதிர்ப்பார்த்த நன்மைக்கு பதிலாக எதிர்பாராத மோசமான காரியம் ஏற்பட்டு, உள்ளம் உடைந்து போனீர்களா? நீங்கள் கர்த்தரை உண்மையாய் பின்பற்றுவீர்களானால், உங்கள் வாழ்வில் நடப்பது எல்லாமே நன்மைக்காகவே. உடனடியாக நமக்கு அந்த நன்மை என்ன என்று தெரியாவிட்டாலும், கர்த்தர் நமக்காக செய்யும் காரியங்கள் நன்மையானவைகளே!
Related Posts Plugin for WordPress, Blogger...