கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 24 August 2012

வேதசித்தத்திற்கு முழுமையாய் அர்ப்பணித்தல்

கி.பி. 16ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் திருச்சபையில் சீர்த்திருத்தம் ஏற்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் பரவலாக யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் சீர்திருத்தவாதி ஜோன் கால்வின் (John Calvin 1509-1564) பாரீசிலிருந்து ஸ்டிராஸ்பேர்க் எனுமிடத்திற்குச் செல்கையில் ஜெனீவா நகரின் ஒருநாள் இரவு தங்கவேண்டியதாயிற்று. அன்றிரவு ஜோன் கால்வின் இன்னுமொரு சீர்த்திருத்தவாதியான வில்லியம் ஃபெரெல் என்பாரைச் சந்தித்தார்.

புரட்டஸ்தாந்து சபையில் குருவானவராக இருந்த வில்லியம் ஃபாரெல், தன்னுடன் தங்கியிருந்து தனது பணிகளுக்கு உதவிசெய்யும்படி ஜோன் கால்வினிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜோன் கால்வின் அவ்வேண்டுகோளுக்குச் சம்மதிக்கவில்லை. இதனால் இவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

கடைசியில் வில்லியம் ஃபெரெல் சற்று கடுமையான குரலில் “நீ உன்னுடைய விருப்பப்படி செயல்படுகிறாய். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நாமத்தில் நான் இன்று உனக்கு சொல்வது யாதெனில், இந்நகரில் நான் செய்யும் கர்த்தருடைய பணிக்கு நீ உதவி செய்யாவிட்டால் நீ தேவனுடைய வேலையை செய்யாமல் உன்னுடைய வேலையை செய்ய முற்படுவதனால் அவர் உன்னைச் சபித்துவிடுவார்.” என்று கூறினார்.

வில்லியம் ஃபெரெலின் இவ்வார்த்தைகள் ஜோன் கால்வினுடைய மனதைக் கடுமையாக தாக்கியமையால், அவர் தன் மரணம் வரை ஜெனீவா நகரில் தனது சீர்த்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். வில்லியம் ஃபெரெலின் வார்தைகளைப் பற்றி பிற்காலத்தில் ஜோன் கால்வின் எழுதும்போது “நான் என்னுடைய வழியில் செல்வதைத் தடுக்கப் பரலோகத்தின் தேவன் தன் கரத்தின் என்மீது வைத்தது போல உணர்ந்தேன். இதனால் நான் எனது பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ வாழ்க்கை வேதசித்தத்திற்கு அடிபணிந்து வாழும் ஒரு வாழ்க்கையாகும். நமது சித்தத்தை முற்றிலுமாய் அகற்றிவிட்டு தேவசித்தத்திற்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும். இதனால்தான் “ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்“.(எபே. 5:17) என்று வேதமும் நமக்கு அறிவுறுத்துகின்றது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...