கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 24 August 2012

நன்மையானவைகளே

அநேக வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் கிளார்க் என்பவர் குடும்பமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு, அநேக நாட்களாக அவரும், அவருடைய மனைவியும், அவருடைய ஒன்பது பிள்ளைகளும் பணத்தை சேமித்து வைத்து, ஸ்காட்லாந்திலிருந்து புறப்படும் ஒரு புதிய கப்பலில் அமெரிக்கா செல்வதற்காக ஒழுங்குகள் செய்திருந்தார்கள். அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருந்தார்கள்.

சரியாக அவர்கள் செல்வதற்கு ஏழு நாட்கள் இருக்கும்போது அவருடைய கடைசி மகனை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது. அவனை பரிசோதித்த வைத்தியர், ஒரு வேளை ரேபீஸ் (Rabies) வருவதற்கு சாதகங்கள் இருக்கிறது என்று பதினான்கு நாட்கள் (Quarantine Period) அவனை கவனிக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.

அதை கேள்விப்பட்ட கிளார்க் மிகவும் விரக்தி அடைந்தார். இத்தனை நாட்கள் குருவி போல சேர்த்து வைத்து, ஆசை ஆசையாய் போக வேண்டும் என்று இருந்தபோது இப்படி ஆகி விட்டதே என்று தன் மகனை ‘உன்னால் தான் என் கனவு நிறைவேறவில்லை’ என்று கடிந்து கொண்டு, ‘ஏன் தேவனால் இதை தடுத்து நிறுத்த முடியவில்லை’ என்று கர்த்தர் மேலும் கோபம் கொண்டார்.

ஐந்து நாட்கள் கழித்து, உலகமே அதிர்ச்சி அடையும் செய்தி வந்தது. மிகவும் விலையுயர்ந்த, மூழ்கவே முடியாது என்று எஞ்சினியர்கள் சிபாரிசு செய்த டைடானிக் கப்பல் மூழ்கி போனது என்றும் அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கானவர்களில் ஆறு பேர் மாத்திரமே தப்பினார்கள் என்றும் செய்தி வந்தது. கிளார்க் குடும்பத்தினர் அந்த கப்பலிலே பயணம் செய்யவே ஒழுங்கு செய்திருந்தாhர்கள். கிளார்க் அவர்களுக்கு அப்பொழுதுதான் புரிந்தது, ஏன் கர்த்தர் அவர்கள் செல்வதற்கு தடை செய்தார் என்று. மகனை கட்டி பிடித்து முத்தமிட்ட அவர் கர்த்தருக்கும் நன்றி சொன்னார்.

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் வருடக்கணக்கில் கனவு கண்டு வந்த காரியம் கைக்கூடி வரவில்லையா? நீங்கள் எதிர்ப்பார்த்த நன்மைக்கு பதிலாக எதிர்பாராத மோசமான காரியம் ஏற்பட்டு, உள்ளம் உடைந்து போனீர்களா? நீங்கள் கர்த்தரை உண்மையாய் பின்பற்றுவீர்களானால், உங்கள் வாழ்வில் நடப்பது எல்லாமே நன்மைக்காகவே. உடனடியாக நமக்கு அந்த நன்மை என்ன என்று தெரியாவிட்டாலும், கர்த்தர் நமக்காக செய்யும் காரியங்கள் நன்மையானவைகளே!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...