கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 6 January 2013

நியாயாசனத்தின் முன்

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10).


இவ்வுலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்ப்ட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அன்று சர்வத்திற்கும் நியாதிபதியாம் இயேசுகிறிஸ்து கெம்பீரமாய் நியாசனத்தில் அமர்ந்து நம் ஒவ்வொருவரிடமும் 'உன் உக்கிராண கணக்கை ஒப்புவி' என்று கட்டளையிட்டால் எவ்வாறு இருக்கும் என்று காண்போம்.



நான் உன் கையில் ஒப்புவித்த உலக பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய், நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக ஐசுவரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்தி கொள்வதற்காகவும் பயன்படுத்தி கொண்டாயா?



நான் உனக்கு தந்ந உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிறவிதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உனனை காத்து கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா?



உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் அவ்வுலக ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயோ? அல்லது வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? இப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்து விட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கி கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பி தந்தாயா?



நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன். அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைக்கும் பாய்னபடுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி, உன்னை பூமிக்கு அனுப்பினவரின் சித்தத்தை செய்த முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும், உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எலலாம் உன் அவயவங்களை ஈனமாய் ஒப்புக்கொடுத்து விட்டாயா?



நியாயாதிபதியாம் இயேசுகிறிஸ்து நம்முடைய கண்களை பார்த்து இத்தகைய கேள்விகளை கேட்டால் நாம் மகிழ்வோடு பதில் கூறுவோமா? அல்லது தலைகுனிந்து காணப்படுவோமா? ஒருவேளை நாம் உண்மையற்றவர்களாய் இருப்போமானால் இன்றே நம் கையில் கொடுத்த உலக பொருளை தேவன் விரும்புகிறபடி செலவிட தீர்மானம் செய்வோம். அப்படியானால் 'நல்லது உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரனே உன் ஆண்டவரின் சந்தோஷத்திற்குள் பிரவேசி' என்ற மதுரமான பரலோக தொனி நம் செவிகளில் இனிதே தொனிக்கும். ஆம், நம் கிரியைக்குத்தக்கதாக அவர் வழங்கும் பிரதிபலன் நித்திய நித்திய காலத்திற்கும் மாறாததாயிருக்கும். அல்லேலூயா!



இயேசுன்னை கண்டதும் உள்ளம் மகிழ்வாரா?
உன்னை கண்டதுமே புன்னகை வருமோ
உள்ளத்தை ஆராய்ந்து பார்
..
நீ போகும் பாதை எல்லாமே தூய்மை
என்றுன்னால் சொல்ல முடியுமா
முடியாவிட்டால் இன்றே நீ ஓடிவா
இயேசுன்னை சேர்த்து கொள்வார்



ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எங்கள் வாழ்நாளை முடித்து, உம்மண்டை வரும்போது, அல்லது நியாயத்தீர்ப்பின் நாளிலே நாங்கள் நிற்கும்போது, நீர் எங்களை பார்த்து புன்னகை செய்யும்படியாக நாங்கள் வாழ்க்கை வாழ கிருபை தாரும். நீர் எங்களுக்கு கிருபையாக கொடுத்திருக்கிற எல்லா ஆசீர்வதங்களையும், சுக ஜீவனையும், நாங்கள் தவறான வழியில் உபயோகிக்காதபடி, உம்மை மகிமைப்படுத்தும்படி உபயோகிக்க கற்று தாரும். எங்கள் கிரியைக்கான பலனை கொடுக்கும் நாளிலே நாங்கள் சந்தோஷப்பட்டு களிகூர உதவும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...