கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 27 November 2012

பழையன ஒழிந்தன, எல்லாம் புதிதாயின

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).


ஒரு ராஜ அரண்மனையில் ஒரு அறிவிப்பு செய்தார்கள். அதன்படி, ஒரு பெரிய விருந்து அரண்மனையில் ஆயத்தபடுத்தப்பட போவதாகவும், அரச உடை அணிந்திருப்பவர்கள் நாளை நடக்கும் அந்த விருந்தில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை ஒரு பிச்சைக்காரன் கேள்விப்பட்டான். அவனுக்கு அந்த விருந்தில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. ஆனால் தான் உடுத்தியிருந்த அழுக்கான கந்தையான உடைகளை பார்த்ததும் அவனுக்கு துக்கம் வந்தது.

நல்ல அரச குடும்பத்தினர் மாத்திரமே அந்த விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்று அவன் நினைத்து, பெருமூச்சு விட்டவனுக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. தான் அதை எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்று நினைத்தபடியே, அவன் அரண்மனையின் வாயிலுக்கு முன்பாக சென்று, அங்கிருந்த வாயிற்காப்போனிடம், தான் அரசனை காண விரும்புவதாக கூறினான். அந்த காவலன், சற்று நேரம் காத்திருக்கும்படி கூறி, உள்ளே சென்று திரும்ப வந்து, அவனை உள்ளே அனுமதித்தான்.

உள்ளே சென்ற பிச்சைக்காரனிடம், அரசர், 'நீ என்னை காண வேண்டும் என்றாயா'? என்று கேட்டார். அதற்கு அவன், 'ஆம் அரசே, நான் நீங்கள் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அதற்கு அரச உடுப்பு இல்லை, உங்களுடைய பழைய உடுப்பு ஏதாவது இருந்தால் எனக்கு கொடுப்பீர்களா? நானும் விருந்தில் கலந்து கொள்வேன்' என்று தைரியமாக கேட்டான்.

அதை கேட்ட அரசர் புன்னகையுடன், 'நல்லது, என்னிடமே நீ கேட்டாயே' என்று கூறி, தம்முடைய இளைய குமாரனிடம், 'உன்னுடைய அறைக்கு கூட்டி சென்று உன்னுடைய உடைகளில் ஒன்றை இவனுக்கு கொடு' என்று கூறினார். அதன்படி, இளவரசன், தன்னுடைய உடைகளில் ஒன்றை எடுத்து கொடுத்து, பிச்சைகாரனை அணிவிக்க செய்தார். அதை அணிந்த பிச்சைகாரனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கண்ணாடிக்கு முன் நின்று, அதையே பார்த்து கொண்டிருந்த பிச்சைகாரனிடம் இளவரசர், 'நீ அணிந்திருக்கிற இந்த உடையுடன் நாளை விருந்தில் கலந்து கொள், வேறு உடை எதுவும் உனக்கு வேண்டாம், இந்த உடை நீ உயிருடன் இருக்கும்வரைக்கும் போதுமானது' என்று கூறினார்.

அதை கேட்ட பிச்சைகாரன் இளவரசரின் கால்களில் விழுந்து, நன்றி கூறி, திரும்ப செல்லும்போது, தன்னுடைய பழைய கந்தல் உடைகளை கண்டு, ஒரு வேளை இளவரசர் தன்னுடைய உடைகளை மீண்டும் கேட்டால்.. என்று நினைத்து, அந்த கந்தையை தன்னுடன் எடுத்து கொண்டு புறப்பட்டான்.

அடுத்த நாள் விருந்தில் கலந்து கொண்ட பிச்சைக்காரன், அவன் வாழ்வில் கண்டிராத அளவு மிகவும் அருமையான உணவு வகைகளையும், பழங்களையும், இனிப்புகளையும் கண்டான். ஆனால், அவன் அதை சந்தோஷமாய் அனுபவிக்க முடியவில்லை, ஏனென்றால் அவன் தன்னுடைய கந்தையை ஒரு துணியில் சுற்றி அதை தன் மடியில் வைத்து இருந்தான். உணவு வரும்போது, அதை எடுக்க முற்படும்போது, அவன் மடியில் இருந்த கந்தை கீழே விழுந்ததால், அவன் விதவிதமான உணவுவகைகளை ருசிக்க முடியாமற் போனது. இளவரசர் சொன்னது போல, அவர் கொடுத்த உடை எப்போதும் அவனுக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவனுக்கோ தன் கந்தையின் மேல் இன்னும் மோகம் இருந்தபடியால், அதை அவன் விடவே யில்லை. எங்கு அவன் சென்றாலும் அந்த கந்தையை தன்னுடன் கொண்டு சென்றான்.

அதனால் அவனை கண்ட மக்கள் அவனை 'கந்தைகளோடு உள்ள வயோதிபன்' என்று அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவன் மரண படுக்கையில் இருந்தான். அவனை காண அரசர் வந்தார். அவரது முகத்தில் அவன் தன் அருகில் வைத்திருந்த கந்தையை கண்டபோது, சோகம் வந்தது. எத்தனை அருமையான உடை இருந்தும் தன் கந்தையை அவன் விடவே இல்லையே என்று சோகத்துடன் அவர் கடந்து சென்றார். அதை கண்ட அந்த பிச்சைக்காரன், இளவரசர் தன்னிடம், 'இந்த கந்தையை விடாதிருந்தால் தாம் கொடுத்த ராஜ உடையை இழக்க வேண்டியதாயிருக்கும்' என்று கூறினதை நினைவு கூர்ந்து, தான் செய்த தவறை நினைத்து அழுதான். ஆனால் அது மிகவும் காலம் கடந்ததாயிருந்தது.

நாமும் கூட அரச விருந்திற்கு அதாவது தேவனுடைய குடும்பத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய அழுக்கான கந்தையாகிய பாவங்களை நம்மை விட்டு அகற்றி, தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து கொடுக்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்திருக்க வேண்டும். இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்து கொண்ட பிறகு பழைய கந்தையான அழுக்கான பாவங்களை நிச்சயமாய் விட்டிருக்க வேண்டும். அதை நாம் தொடர்ந்து பிடித்து கொண்டு ருப்போமானால், நாம் நிச்சயமாக கர்த்தருடைய விருந்தில் கலந்து கொள்ள முடியாது. இரட்சிப்பின் வஸ்திரம் இருந்தால் தான் நாம் பரலோகம் செல்ல முடியும். 'ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' என்ற வசனத்தின்படி, நாம் புதிதாக்கப்பட்டவர்களாக, நம்முடைய வாழ்க்கை புதியதாக மாற வேண்டும். பழைய பாவ பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு முற்றிலும் அகல வேண்டும். பாவங்களை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிதாய் பிறந்த குழந்தையை போல நாம் கர்த்தருக்குள் வளர தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே - நான்
புதியன படைப்பானேன்
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, என்னுடைய பாவங்கள் அழுக்கான கந்தையை போல் இருக்கிறதே, இயேசுகிறிஸ்துவின் தூய இரத்தத்தால் கழுவி என்னை சுத்திகரிப்பீராக. என்னை கழுவி சுத்திகரித்து, பாவங்களை போக்குவதற்காய் உமக்கு நன்றி. இரட்சிப்பின் மெல்லிய வஸ்திரத்தை எனக்கு உடுத்துவிப்பதற்காக உமக்கு நன்றி. என்னுடைய பழைய பாவங்கள் எதையும் என்னுடன் கந்தையை போல கொண்டு வராதபடிக்கு, அவைகளை முற்றிலும் என்னை விட்டு அகற்றும். பரிசுத்தமாய் வாழ கிருபை செய்யும். எல்லாவற்றையும் புதியதாக மாறி, என்னை உம்முடைய சொந்த மகனாக, மகளாக ஏற்று கொண்ட கிருபைக்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...