கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 2 December 2012

பாவத்திலிருந்து விடுதலை

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். - (1 யோவான் 1:8-9).

ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை நோக்கி செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று வேகவேகமாக தாவின. இதை மேலிருந்து பார்த்து கொண்டிருந்த தவளைகளில் ஒன்று, 'நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக முயற்சிக்கிறீர்கள்' என்றது. இதை கேட்டவுடன் அந்த தவளை சோர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு மட்டும் மேலே வர முயற்சித்தன.

மேலேயிருந்த மற்றொரு தவளை கூறியது, 'மழைக்காலம் வரும் அப்போது இநத குழி மழை நீரால் நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி வெளியே வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்' என்றது. அதுதான் சிறந்த யோசனை என்று இரண்டாவது தவளையும் எண்ணி தாவுவதை நிறுததியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக வெளியே வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் 'நீயும் எங்களுடன் இரு. உனக்கு துணையாகத்தான் நாங்கள் இருக்கிறோமே' என்றன. ஆனாலும் காது கேளாதது போல பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்து விட்டது அந்த தவளை.

வேதத்தில் சிலர் பாவத்தில் விழுந்து திரும்ப எழுந்தரிக்க முயற்சிக்கவே இல்லை. அவர்கள் முயற்சித்திருந்தால் ஒருவேளை பாவததிலிருந்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் அவர்களோ பாவத்தில் இருப்பதையே விரும்பினார்கள்.

ஆனால் தாவீது ராஜா பாவத்தில் விழுந்து, அதை நாத்தான் தீர்க்கதரிசி கண்டித்தவுடன் அதை ஒப்புக்கொண்டு, அந்த பாவத்திற்கு மனம் வருந்தினார். பாவத்தை தேவனிடம் அறிக்கையிட்டார்.

நாமும் நமது வாழ்க்கை பயணததில் அறிந்தோ அறியாமலோ பாவத்தில் விழுந்து விடுகிறோம். விழுந்த நாம் அதிலிருந்து மீள முயற்சிக்கும்போது, சாத்தான் நம்மிடம், 'நீ எழும்பவே முடியாது. பாவமே இன்பம், நீ உன்னை சரிபடுத்த முயற்சிக்காதே' என்பான். நம்முடன் இருக்கும் நண்பர்களோ 'வயதாகும் காலம் வரும். அப்போது நாம் முயற்சிக்காமலேயே பாவ ஆசைகள் நம்மை விட்டு போய்விடும். அதுவரை இன்பம் காண்போம் என்று கூறலாம். மற்றொரு கூட்ட நண்பர்கள் 'நீ மட்டும் ஏன் அடிக்கடி குற்ற உணர்வு அடைகிறாய்? நாங்களும் உனக்கு துணையாக இருக்கிறோம், நீ மாட்டி கொள்ள மாட்டாய்' என்பார்கள். பாவத்தில் உழலும் மக்களின் பேச்சும் இதுவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே, ஏதோ ஒரு இரகசிய பாவத்தில் விழுந்து விட்டீர்களோ? இனி சுற்றியிருப்பவர்களின் பேச்சை கேளாமல் முழு மூச்சோடு ஆவியானவரின் துணை கொண்டு வெளியே வந்து விடுங்கள். பாவத்திலிருந்து வெளிவர முயற்சித்து வெற்றி கண்டவர் தாவீது. தேவனுடைய இருதயததிற்கு ஏற்றவராக மாறினார். அவரை போல பாவத்தை தேவனிடம் அறிக்கை செய்து, அவற்றை விட்டு வெளியே வந்து விடுங்கள். 'நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்' - (1யோவான் 1:8-9) என்று வேதம் திட்டவட்டமாக நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் நம் பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு, அதினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நம்மை சுத்திகரிக்க அவரிடம் ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சுத்திகரித்து அவருடைய இராஜ்யத்திற்கு பங்குள்ளவர்களாக மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!

துணை வேண்டும் தகப்பனே உலகிலே

என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே

என் ஜீவன் எல்லை எங்கிலும்

பரிசுத்தம் என எழுதும்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்

ஜொலித்திடும் சுத்த ஜோதியே

அரூபியே இவ்வேளையில்

அடியார் நெஞ்சம் வாரீரோ


ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த உலகமும் சாத்தானும் எப்படியாவதுஎஙகளை பாவத்தில் தள்ள வேண்டும் என்று எங்களை பாவத்தில் தள்ளினாலும்,நாங்கள் அதிலேயே விழுந்து கிடக்காமல், அதிலிருந்து எழுந்து திரும்பவும் அப்பாவிடம்வந்து விட கிருபை செய்வீராக. எங்கள் பாவங்களை உம்மிடம் அறிக்கை செய்துஅவற்றை விட்டு விட கிருபை தாரும். உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...