கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 14 September 2012

தாழ்மை

உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12)

18-ம் நூற்றாண்டில், அமரிக்காவில் உள்ள மேரிலேண்ட் (MaryLand) என்னும் நகரத்தில், அடித்த பலத்தக் காற்றில், ஒரு முக்கியமான பாதையில் ஒரு பெரிய மரம் வேரோடு பிடுங்கப்பட்டு, அந்தப் பாதையில் விழுந்தது. அதை ஒரு சில இராணுவ வீரர்கள் சேர்ந்து, மரத்தின் கிளைகளை வெட்டி, அந்தப் பெரிய மரத்தை அந்தப்பாதையிலிருந்து, எடுக்க மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய அதிகாரி, ஒரு குதிரையின் மேல், உட்கார்ந்துக் கொண்டு, அதைச் செய், இதைச் செய் என்று, அதிகாரம் பணணிக் கொண்டிருந்தாரே ஒழிய, ஒருச் சின்ன இலையைக்கூட எடுத்துப்போடவில்லை. 

அப்போது அவ்வழியே ஒரு வெள்ளை குதிரையின் மேல் வந்த ஒருவர், அந்த அதிகாரியைப் பார்த்து, 'நீர் ஏன் அந்த வீரர்களுக்கு உதவாமல், சத்தமாய் அப்படிச் செய் என்று அதிகாரம் செய்;துக் கொண்டிருக்கிறீர், போய் உதவலாமே' என்றுக் கேட்டதற்கு அந்த அதிகாரி, 'நான் ஒரு பெரிய அதிகாரி, இவர்களோடுப் போய் உதவிச் செய்வது என்னுடைய பதவிக்கும் மரியாதைக்கும் இழுக்கு' என்றுக் கூறினார். 

அப்போது அந்த வழிபோக்கர், தனது மேலாடையையும், தொப்பியையும் கழற்றிவிட்டு, மற்ற வீரர்களோடு சேர்ந்து, மிகவும், பிரயாசப்பட்டு, அ;நத மரத்தை அந்தப் பாதையிலிருந்து; எடுத்துப் போட்டார்கள். பிறகு அவ்வழிபோக்கர் அந்த அதிகாரியிடம், 'ஏதாவது தேவையென்றால் என்னைக் கூப்பிடுங்கள், நான் வந்து உதவுகிறேன்' என்றுக் கூறினார். அதற்கு அந்த அதிகாரி, 'நீர் யார்?' என்றுக் கேட்க, அவ்வழிபோக்கர், 'நான் தான் ஜார்ஜ் வாஷிங்டன்' (George Washington) என்றுக் கூறிவிட்டு, தனது குதிரையில் ஏறி விரைந்தார். அதைக் கேட்ட அந்த அதிகாரி ஆச்சரியமும் வெட்கமும் அடைந்தார். அந்த வழிபோக்கர் அமெரிக்க அதிபரும், அமெரிக்க ராணுவத்தின் தலைவருமாகிய ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார்.

'உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்' - (லூக்கா 22: 26,27) என்று இயேசுகிறிஸ்துக் கூறினார். தம்மையே தாழ்த்தி, அவர் நமக்கு எடுத்துக் காட்டுவதற்காக சீஷர்களின் கால்களைக் கழுவினார். 

நமக்குள் ஒரு பெருமையும் வேண்டாம். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்று வேத வசனம் கூறுகிறது. நம்மில் யாராவது, பெரியவராக இருக்க விரும்பினால், முதலலாவது நம்மைத் தாழ்த்தி, மற்றவர்களுக்கு ஊழியக்காரராயிக்க வேண்டும். அதற்கு தாழ்மை மிகவும் அவசியம். மற்றவர்களை அதிகாரம் செலுத்துவதால் ஒருவரும், பெரியவராகிவிட முடியாது. அநேக தேவ ஊழியர்களின் வாழ்கை முறையைப் பார்க்கும்போது, அவர்கள் அதிகாரம் செலுத்துவதால் மக்கள் அவர்களிடம் போய் அவர்களோடு இணைந்து ஊழியம் செய்வதில்லை. அவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எவ்வளவு தூரம் தங்களைத் தாழ்த்துகிறார்கள் என்பதையும் பார்த்துதான் அவரோடு இணைந்து ஊழியம் செய்கிறார்கள். 

நம்முடைய வேலை இடங்களில், நமது சபைகளில், நமது குடும்பங்களில் நாம் நம்மை தாழ்த்துவோம். வாஷிங்டன் தான் ஒரு அதிபர் என்றுக்கூடப் பார்க்காமல், மற்றவர்களோடு இணைந்து அவர் வேலை செய்ததால், இன்று அநேகருக்கு அவர் ஒரு எடுத்தக்காட்டாக இருப்பதைப் போல், நாமும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவோம். தன்னை உயர்த்துகிறவன் யாரும் உயர்த்தப்பட்டதில்லை. தன்னை தாழ்த்துகிறவர்களே உயர்த்தபட்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு நம்மைத் தாழ்த்துவோம். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது ( யாக்கோபு. 4:6 ). நம்மைத் தாழ்த்துவதால் கர்த்தரிடம் இருந்துவரும் அவருடைய விசேஷித்தக் கிருபைகளைப் பெற்றுக் கொள்வோம். 

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே

ஜெபம்: எங்களுடைய தாழ்மையில் எங்களை நினைவுகூரும் எங்கள் நல்ல தகப்பனே, எங்களுக்காக மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தின இயேசுகிறிஸ்துவின் தாழ்மை எங்களுக்கும் வரட்டும் ஐயா. எந்தவிதத்திலும் எங்களை நாங்களே உயர்த்தாமல் எங்களை தாழ்த்தி, உம்முடைய கிருபைகளை பெற்றுக்கொள்ள கிருபைச் செய்யும். பெருமை எங்களுக்கு துளியும் வராமல், எல்லாவற்றையும் தாழ்மையோடு செய்ய எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...