கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 17 September 2012

ஞானத்தைப் பெறும் வழிமுறைகள் - Finding Godly wisdom.....

தேவனிடத்திலிருந்து வருகின்ற ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாம் தேவனிடத்தில் முதலாவது ஜெபிக்க வேண்டும். இரண்டாவதாக ஞானத்தை தேட வேண்டும். இவைகளைக் குறித்து இனி கவனிப்போம்.

அ. ஞானத்தைப் பெற ஜெபித்தல்.
“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5)

நாம் ஜெபிக்கும்போது மாயக்காரரைப்போல தவறான உள்ளத்தோடும், தவறான நோக்கத்தோடு ஜெபிக்கக்கூடாது என்று கற்றுத்தந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, நாம் எப்படி ஜெபிக்கக்கூடாது என்பதைக்குறித்து கூறும்போது, 'அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள். அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்" (மத்தேயு 6:7) என்றார். இங்கே தேவனை அறியாத மக்கள்தான் அஞ்ஞானிகள். அதனால்தான் கடவுளை அறியாதவர்கள் போல ஜெபிக்கவேண்டாம் என ஆண்டவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இவ்வசனத்தில் ஜெபத்தில் அவர்களைப்போல வீண்வார்த்தைகளை (பொய்) அலப்பாதேயுங்கள் என்றும் கூறுகின்றார். வீண் வார்த்தைகள் என்றால் என்ன? இதை அர்த்தமில்லாத வார்த்தைகள் என்றும் கூறலாம். இந்த உலகத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகள் என்று ஏதாவது உண்டா? இல்லை வார்த்தை என்று சொன்னாலே அதற்கு ஏதோ ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யும். அர்த்தமில்லாதவை வார்த்தை என்ற அழைக்கமுடியாது. அப்படியானால் இங்கே அர்த்தமில்லாத வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என ஆண்டவர் எதனைக் குறிப்பிடுகிறார்? அர்த்தமுள்ள வார்த்தையை ஒருவர் அர்த்தமில்லாமல் உச்சரிப்பதுதான் அர்த்தமில்லாத ஜெபமாகும். இதுவும் ஞானமற்ற தன்மைக்கு ஒரு சிறந்த சான்றாகும். நாமோ ஞானத்தைத் தருகின்ற தேவனிடத்தில் தைரியத்தோடு அர்த்தத்தோடு ஜெபித்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நாம் அஞ்ஞானிகளாக திகழமாட்டோம்.


ஆ. ஞானத்தைத் தேடுங்கள்.
“ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?” என யோபு 28:12 இல் கேட்கின்றார். “பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்@ புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்." (நீதி.14:6). “சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்." (பிர-9:13) போன்ற வசனங்களிலிருந்து நாமும் ஞானத்தை தேடி கண்டுபிடிக்க முடியும் என்பதைக் காண்கின்றோம்.
'தேவன் தருகின்ற ஞானமுள்ள வழிநடத்துதலைப் பெறவேண்டுமானால், அவர் ஏற்கனவே தந்துள்ள வழிநடத்துதல்களைக் கண்டுபிடிக்கவேண்டும்." நான் ஒருசில காரியங்களுக்காக அவரிடமிருந்து வழிநடத்துதல்களைப் பெறவேண்டுமென அவரிடம் ஜெபிக்கும்போது, 'நான் கடைசியாக கொடுத்த வழிநடத்துதலை வைத்துக்கொண்டு நீ என்ன செய்தாய்?" என்று அவர் கேட்பதை நான் அடிக்கடி உணர்ந்திருக்கின்றேன். என கூறுகிறார் ஒரு தேவ மனிதர். ஆம், தேவ ஞானமானது அவருடைய வழிநடத்துதலைப் பெறுவதாகும். எனவே நாம் எப்போதும் ஞானத்திற்காக தேவனைச் சார்ந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.

இ. ஞானத்தை இழந்துவிடாதிருங்கள்.
“ய+தர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.” என பவுல் 1கொரி-1:22 இல் கூறுவதையும் நாம் மறந்துவிடலாகாது. அடையாளம் மட்டும் போதாது. ஞானத்தை நாம் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். அதை இழந்துபோவதை தேவன் விரும்பவில்லை. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்.” என யாக்கோபு நமக்கு உற்சாகம் தருகின்றார். (யாக்கோபு 1:7-8).

ஈ. ஞானத்தை நடப்பியுங்கள்.
“உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.” என யாக்கோபு 3:13,18 ம் வசனங்களிலே கூறுகின்றார். நாம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டால் மாத்திரம் போதாது. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட ஞானத்தை நாம் கிரியையில் காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

உ. ஞானத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
நாம் ஞானமுள்ளவர்களாகி விட்டோம் என்று எண்ணும் நிலை வந்தவுடன், நாம் ஞானமுள்ளவர்கள் என்பதால் கற்றுக்கொள்பவன் என்ற நிலைக்கு அப்பால் போகக்கூடாது. அதாவது ஞானமாய் வாழ்வதென்பது ஒவ்வொரு நாளும் சுயம் சிலுவையில் அறையப்பட்ட வாழ்வாகும். ஒவ்வொரு நாளும் நமது தேவைகளைவிட பிறரது விருப்பங்களுக்கு முதலிடம் கொடுப்பதாகும். ஒவ்வொரு நாளும் தேவனுடன் நடப்பதாகும்”. ஆகவே நாம் ஞானத்தை பின்பற்ற தேவன் நமக்கு தந்துள்ள மாதிரியை பின்பற்ற அழைக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம். “தேவனே எம்மை ஞானமுள்ளவர்களாக்கும்” என்று கேட்பதோடு அவர் தருகின்ற மனத்தாழ்மையை அணிந்து கற்றுக் கொள்பவர்களாக இருக்கவேண்டும். “நாம் உண்மையாகவே இதற்கு பசி தாகமுள்ளவர்களாக இருக்காவிட்டால் நாம் திருப்தியற்றவர்களாகி விடுவோம்”.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...