கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 September 2012

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வின்போது ஒரு அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, 'யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். 

அந்த அறையிலிருந்த அனைவரும் தம் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள். உடனே பிரசங்கியார் 'இந்த 1000 ரூபாவை உங்களில் ஒருவருக்குக் கொடுக்கப் போகிறேன். அதற்குமுன் ஒரு காரியத்தைச் செய்யப் போகிறேன் என்று சொல்லி. அந்த 1000 ரூபாய் தாளை தன் கைகளினால் கசக்கிப் பிழிந்தார்.

பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'இது யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மறுபடியும் கைகள் உயர்ந்தன. உடனே அவர் அந்த 1000 ரூபாய் தாளை நிலத்தில் போட்டு,
தன் காலால் மிதித்தார். 

மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'கால்களால் மிதிக்கப்பட்ட இந்த அழுக்கான தாள் யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மீண்டுமாக அனைவரும் தங்கள் கைகளை உயர்த்திக் காட்டினார்கள். 

உடனே அவர் அவர்களை நோக்கி 'பார்த்தீர்களா! இதிலிருந்து நாம் அருமையானதொரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். இந்த 1000 ரூபாய் தாளுக்கு நான் என்ன செய்தாலும் அதைக் குறித்து நீங்கள் பொருட்படுத்தவே இல்லை. அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளவே விரும்பினீர்கள். ஏனெனில் அது தனது பெறுமதியை இழந்து போகவேயில்லை. அதுபோலவே நமது வாழ்வும். பலவேளைகளில் சந்தர்ப்ப சூழ்நிலை களினாலும், நமது தவறான தீர்மானங்களினாலும், மற்றவர்களாலும் வீழ்த்தப்படுகிறோம். கசக்கப்படுகிறோம், காயப்படுகிறோம், மிதிக்கப்படுகிறோம், சேறு பூசப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் நம்மைக் குறித்து பெறுமதியற்றவர்களாக எண்ணி உடைந்து விடுகின்றோம். ஆனால் நமது வாழ்வில் என்ன நிகழ்ந்திருந்தாலும், இனிமேல் என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் உங்கள் பெறுமதியை இழப்பதில்லை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை படைத்த நம்முடைய ஆண்டவருக்கு நாம் பெறுமதி வாய்ந்தவர்கள். “

“நமது வாழ்வின் பெறுமதியானது, நாம் என்ன சாதித்திருக்கிறோம், நமக்கு என்னத் தெரியும் என்பதில் அல்ல, நம்மில் நாமே பெறுமதி உள்ளவர்களாய் இருக்கிறோம்" என்றார்.

சிந்தனைக்கு: 

உங்கள் பரம பிதாவுக்கு '..நீங்கள் விசேஷித்தவர்கள்" (மத்.6:26). 

'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர்.5:8).

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...