கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 September 2012

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

இக்கட்டுரையின் மூலம் றொபர்ட் பீட்டர்சன் அவர்களுடையது)

ஒருமுறை யுத்தமொன்றில் கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு சிறைச்சாலையொன்றில் அடைத்துவைக்கப்பட்டார். அங்கே அவர் பலவந்தமான முறையிலான சித்தத்தாக்குதலுக்கு (மூளைச்சலவை) அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் அதற்கு இலக்காகிவிடவில்லை. (வேதவார்த்தைகள் நிரம்பிய ஒருவனுக்கு இலகுவில் ப்ரைன் வாஷ் செய்யமுடியாது) அவ்வேளையில் அவருடைய சிந்தைக்கு நங்கூரமாய் இருந்தது இந்த 23ம் சங்கீதமே. ஆழ்ந்த சோர்வோடு விரக்தியுற்றிருந்த அந்நிலையின் நடுவிலும் அவர் இச்சங்கீதத்தை உச்சரித்து, சரீரப்பிரகாரமாகவும் ஆத்மபிரகாரமாகவும் புதுத்தெம்பை அடைந்தார். இவரின் சிறுபிராயத்தில் இவரது தாயார் இச்சங்கீதத்தை இவருக்குக் கற்றுக்கொடுத்தது இவரது பாக்கியமே! இவ்விதம் பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளை எமது தினசரி வாழ்க்கையில் பிரயோகிப்பதே நம் வாழ்வில் தேவ ஆவியானவர் செய்யும் கிரியையாகும்.

இன்று இருவகை கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஒருசிலர், இயேசுகிறிஸ்துவை தங்களின் மீட்பராக அறிந்துள்ள பொழுதிலும் தங்களின் பாரத்தை தாமே சுமக்கின்றனர். (இது உறவை அறுக்கின்றது. மனமுறிவில் முடிகின்றது). மற்றவர்களோ,இயேசுவை தங்களின் மீட்பராக அறிந்து இருப்பதோடு, அவரைத் தங்களின் வாழ்க்கைக்குரிய மேய்ப்பனாகவும் மீட்பராகவும் அறிந்துகொண்டுள்ளனர். இவ்வகை கிறிஸ்தவனே 23ம் சங்கீதத்தில் குறிப்பிடப்படுகிறான்.


கர்த்தர்

23ம் சங்கீதத்தின் முதலாவது சொல், 'கர்த்தர்” என்பதாகும். ஆங்கில வேதாகமங்களில் இச்சொல்லின் ஒவ்வொரு எழுத்துக்களும் பெரிதாக எழுதப்பட்டு இருப்பதைக் காணலாம். அதன் அர்த்தம் இச்சொல், 'யேகோவா” என்ற பெயரின் மொழிபெயர்ப்பாகும். இன்னுமொரு ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பில் 'யேகோவா என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்” என இருக்கிறது.

‘யேகோவா’ என்ற பெயர் பழைய ஏற்பாட்டில், 7000ம் தடவைகள் வருகின்றன. இதன் அர்த்தம் 'மீட்பராகிய இயேசு” என்பதாகும். பழைய ஏற்பாட்டில் 'யேகோவா” என்று அழைக்கப்பட்டுள்ள பெயரே புதிய ஏற்பாட்டில் 'இயேசுகிறிஸ்து” என்பதாகும். எனவே இந்த வசனம், 'மீட்பராகிய இயேசு என் மேய்ப்பராயிருக்கிறார். எனவே நான் தாழ்ச்சியடையேன்” என்றும் வாசிக்கப்படலாம்.

இந்த 23ம் சங்கீதத்தின் மகத்தான வாக்குத்தத்தமானது குறிப்பிட்ட ஒரு சிலருக்கோ அல்லது உலகிலுள்ள அனைவருக்குமோ அருளப்படவில்லை. உண்மையில் யார் தேவனின் ஆச்சரியமான இரட்சிப்பின் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே இது அருளப்பட்டுள்ளது. அவரை விசுவாசிப்பவர்கள் மாத்திரமே மேய்ப்பனின் அரவணைப்பை அனுபவிக்க முடியும். உலகத்தைப் படைத்து அதைத் தன் கைகளிலே ஏந்திக்கொண்டு இருப்பவரும் இருக்கிறவரும் எல்லா அன்பும் எல்லா வல்லமையும் படைத்த மீட்பரை அறிந்துகொள்வது தான் எத்தனை ஆச்சரியமானது? ஒவ்வொரு விசுவாசியினுடைய வாழ்விலும் மேய்ப்பனாய் வர, அவர் காத்து நிற்பதோடு யார் யார் அவ்விதமாய் தன்னுடைய வாழ்விலே வரவேண்டுமென விரும்புகிறார்களோ அவர்களைக் காப்பாற்றுகின்றவராயும் இருக்கிறார்.

இயேசு, 'வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது” (மத்.28:18) என்று கூறினார். அவர் சாத்தானை சந்தித்தபொழுது எவ்விதமாய் அவனை மேற்கொண்டாரோ அதேபோல அவர் மேய்ப்பனானவர் என்ற முறையில் விசுவாசிகளின் ஒவ்வொரு எதிரியையும் மேற்கொள்ள வல்லவராயிருக்கிறார்.

என்

23ம் சங்கீதத்தின் முதலாம் வசனத்தின் அடுத்த சொல்லான 'என்” முக்கியமானதொரு சொல்லாகும். நான் இயேசுவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கு முன்பே, அவரது சிலுவை மரணத்தைக் குறித்து அறிந்திருந்தேன். அதேபோல நான் இரட்சிக்கப்பட்டதன் பின்னர், மற்றவர்களுடைய வாழ்க்கையில், இயேசு ஒரு மேய்ப்பனாக இருப்பதை நான் பார்த்தேனேயொழிய என்னுடைய வாழ்க்கையில் மேய்ப்பனைப் போன்று அரவணைக்கும் தன்மையை நான் அறிந்திருக்கவில்லை.

குமார் தான் சேமித்துவைத்திருந்த பணத்தில் வேகத்தை கூட்டிக்குறைக்கும் கியர் வசதியுள்ள ஒரு சைக்கிளை வாங்கினான். அவனுடைய நண்பர்களில் ஒருவன், 'அட, கியர் வசதியுள்ள சைக்கிள்” என வியந்தான். அதற்கு குமார், 'ஆமாம், இது என்னுடைய சைக்கிள்” என்றான். தொடர்ந்து மற்றுமொருவன் 'அட இதில் லைட்டும் ஹோனும்கூட இருக்கிறது” என்றான். அப்போதும் குமார், 'ஆமாம், இது என்னுடைய சைக்கிள்” என்றான். குமாரின் இரண்டு நண்பர்களும் அவனுடைய புது சைக்கிள் வண்டியைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தபோது, குமார் மிகுந்த சந்தோஷமடைந்ததற்கு காரணம் அது அவனுக்கு சொந்தமானதாக இருந்தமையே.

இதேபோல்தான் அநேக கிறிஸ்தவர்கள் இன்று, ஆண்டவரின், 'மேய்ப்பனைப் போன்ற அரவணைக்கும் தன்மையை” மற்றவர்களில் கண்டு இரசிக்கிறார்கள் எனினும், இயேசுவை தங்களின் மேய்ப்பனாக ஆக்கிக்கொள்ளாதபடியினாலே இன்னமும் பயத்திலும் விரக்தியிலும் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். இயேசுவை தங்களின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களில் வெகுசிலர் மட்டுமே கவலையற்ற வாழ்வு என்றால் என்ன, என்பதைப் புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர். இயேசு எமது இரட்சகர் மட்டுமல்ல, அவர் நமது மேய்ப்பராகவும் இருக்கிறார்.

ஒருமுறை பிரசித்திப்பெற்ற ஒரு சிறந்த பாடகர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் ஆராதனையொன் றில் கலந்துகொண்டபோது சபை மக்கள் அவரை ஏதேனும் ஒரு பாடலை பாடிக்காட்டும் படியாக கேட்டுக் கொண்டார்கள். அவ்வேளையில் அப்பாடகர் சபையார் முன்னிலையில் 23ம் சங்கீதத்தை தனது திறமையால் பாடலாக பாடினார். அவரது பாடலை கேட்டு முழுச்சபையுமே அசைந்தது. அவர் பாடி முடித்ததும் சபையில் பலத்த கரகோஷம் எழும்ப ஆரம்பித்தது.

அந்த மாபெரும் பாடகர் தன்னுடைய ஆசனத்தை அடைந்தவுடன், வயதான சுவிசேஷகர் ஒருவர் மெதுவாக எழுந்து முன்நோக்கி நடந்து வரலானார். தளதளத்த குரலில், அதே 23ம் சங்கீதத்தை கூற ஆரம்பித்தார். அவர் கூறி முடிப்பதற்குள் சபையார் கண்ணீரில் முழ்கலாயினர். தன் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட எழுந்து நின்ற அந்த மாபெரும் பாடகர் 'நான் இச்சங்கீதத்தின் சொற்களை மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால் இவரோ அந்த மேய்ப்பனையே அறிந்திருக்கிறார்” என்றார். 23ம் சங்கீதத்தை மனனஞ்செய்வது முக்கியமல்ல. திரும்பத்திரும்ப கூறுவதும் பிரயோஜனமல்ல. அதனை எம்முடைய தினசரி வாழ்விலே பிரயோகிப்பதோடு, கிறிஸ்து தன்னுடையவர்களுக்கு எவற்றையெல்லாம் அருளிச்செய்ய விரும்புகிறாரோ அவற்றையெல்லாம் எம்முடையதாக்கிக் கொள்வதே முக்கியமானது.

மேய்ப்பராயிருக்கிறார்

இவ்வசனத்தின் மூன்றாவது சொல்லை இரு கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று 'மேய்ப்பர்” இரண்டாவது 'இருக்கிறார்” முதலில், 'மேய்ப்பன்” என்ற சொல்லைக் கவனிப்போம். இச்சொல்லுக்கு இயேசு தரும் வரைவிலக்கணத்தை யோவான் 10:4ல் வாசிக்கிறோம். 'அவன் தன்னுடைய ஆடுகளை வெளியேவிட்ட பின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான். ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கின்றபடியினால் அவனுக்குப் பின் செல்லுகிறது.” இயேசு எமக்கு முன்பாக நடந்து போகின்றவராயிருக்கிறார். அவ்விதம் அவர் நடந்து போகிறதினாலே, பெரிய மேய்ப்பனான அவர் விசுவாசிகள் எதிர்நோக்கக்கூடியதான ஒவ்வொரு தடைகளையும் ஏற்கனவே எதிர்நோக்கிவிட்டார். வேதனை களையும் மனநோவையும் அவர்கள் அனுபவிக்கும் போது எவ்வித உணர்வுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பதை அவர் அப்படியே அறிகிறவராயிருக்கிறார்.

இனி 'இருக்கிறார்” என்ற சொல்லைக் கவனிப்போம். 'கர்த்தர் மேய்ப்பராய் இருந்தார்” என்றோ 'மேய்ப்பராய் இருப்பார்” என்றோ வேதம் சொல்லவில்லை. மாறாக, அவருடைய பிள்ளைகள் அவரை நோக்கிப் பார்க்கும்படியாகவும் அவரிலே சார்ந்திருக்கும்படியாகவும் அவர் எப்போதும் 'மேய்ப்பராய் இருக்கிறார்” என்றே கூறுகிறது.

நான் தாழ்ச்சியடையேன்

23ம் சங்கீதத்தின் முதலாவது வசனம் 'நான் தாழ்ச்சியடையேன்” என முடிவடைவதை காணலாம். இதனை 'எனக்கு ஒன்றிலும் குறைவு ஏற்படாது” என்றும் மொழிபெயர்க்கலாம். அதாவது விசுவாசி களுக்கு சமாதானக்குறைவு ஏற்படாது. ஏனென்றால், இயேசுவே அவர்களின் சமாதானக் காரணராயிருக்கிறார். பராமரிப்பில் அவர்களுக்கு ஒருகுறையும் ஏற்படாது. ஏனென்றால், மேய்ப்பனானவர் அவர்களின் ஒவ்வொரு தேவையையும் சந்திக்க ஆயத்தமாய் இருக்கிறார். தேவை எதுவோ, அதனை மேய்ப்பனான வரே தீர்த்து வைக்கிறவராயிருக்கிறார்.

விசேஷமாய் மனமொடிந்து போயிருப்பவர்களுக்கு, ஆண்டவர் மிக அண்மையில் இருக்கிறார். (சங்.34:18,19ல் 'நொருங்குண்ட இருதயமுள்ளவர் களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். ஆம், இயேசு ஒருவரே, மனமொடிந்திருப்பவர்களைத் தேற்றி, அவர்களுக்கு வாழ்க்கைப் புயலின் மத்தியில் சமாதானத்தை அருளக்கூடியவராய் இருக்கிறார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...