கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday 25 August 2012

உள்ளபடியே ஏற்றுக்கொள்வார்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்…. நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.  ( 1யோவான் 1 : 9 ) 

ஒரு மண்டபத்திலே ஒரு வேலையை முடிப்பதற்காகக் காத்திருந்தனர். அங்கே அழகான ஒரு குழந்தை அழகிய வர்ணமுள்ள சட்டை அணிந்தவளாக அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் ஒரு குறிப்பிட்ட பெண் மாத்திரம், அக் குழந்தை அவளிடம் செல்லும் போது அக்குழந்தையை கவனிக்காமல் இருந்தாள். அப்பொழுது அங்கிருந்த அனைவரும் ஒரு அழகான குழந்தையோடு இவளுக்கு விளையாடக்கூடத் தெரியவில்லை. மிகவும் கல்நெஞ்சக்காரிபோலும் என்று பேசிக்கொண்டு தொடர்ந்து அக் குழந்தையோடு அனைரும் விளையாடினர். சிறிது நேரத்தில் அக்குழந்தையில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதை அனைவரும் உணர்ந்து கொண்டதால், அக்குழந்தையை அருவருப்போடு விரட்டத் தொடங்கினர். குழந்தையோ இவ்வளவு நேரமும் தன்னோடு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் மாறி மாறிச் சென்றது. அனைவரும் கவனியாது விரட்டியடித்தனர். கடைசியில் அக்குழந்தை தன்னை முதலில் கவனியாதுவிட்ட பெண்ணிடம் அழுதுகொண்டு சென்றது. அப்பொழுது அப்பெண் குழந்தையை அன்போடு வாரி அணைத்துக்கொண்டாள். பிள்ளையை துக்கிச்சென்று அதன் நாற்றத்தை கழுவி அதற்குப் புது உடை அணிவித்து மீண்டும் அனைவரும் விரும்பும் அழகான குழந்தையாக்கினாள். அப்பொழுதுதான் தாம் கல்நெஞ்சக்காரி என்று யாரை நினைத்தார்களோ! அவளே அக்குழந்தையின் தாய் என்பதை அங்கிருந்தோர் உணர்ந்து கொண்டனர்.

எமது வெளித்தோற்றமாகிய அழகு, அந்தஸ்து, படிப்பு, பணம், வசதி, திறமைகள் போன்றவற்றைப் பார்த்து பிறர் எம்மீது மதிப்பும், கரிசனையும், விருப்பும் காட்டலாம். இவைகளெல்லாம் எம்மை விட்டு எடுபடும்போது சமுதாயத்தில் எம் மதிப்பு குறைந்து போகலாம். ஆனால் எம்மை உள்ளபடியே, நாம் இருக்கும் நிலையிலேயே, பாவமும் அக்கிரமமும் நிறைந்து நாறிப்போய் இருக்கும் உள்ளத்துடனேயே எம்மை எற்றுக்கொண்டு தன் தூய ரத்தத்தால் எம்மை கழுவி, எம்மை தம் பிள்ளையாக்கி நித்தியமான வாழ்வை எமக்கு தர ஆண்டவரால் மாத்திரமே முடியும். என்னையும் உங்களையும் உள்ளபடியே எற்றுக்கொடாரல்லவோ. இப்படிப்பட்ட உன்னதமான இரட்சிப்பை அவர் முலமாய் பெற்றுக்கொண்ட நாம் ஏனோதானோ என்று எந்தவிதமான அர்ப்பணமும் நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அவருக்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எமது ஜீவிய காலமெல்லாம் அவருக்கே சேவை செய்ய எம்மை இன்றே அவர் பாதத்தில் ஒப்புக்கொடுப்போமா.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...